உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படத்தயாரிப்பு மோசடி கும்பலிடம் சிக்கி ஒன்றரை கோடி ரூபாயை இழந்த விவேக் ஓபராய்

படத்தயாரிப்பு மோசடி கும்பலிடம் சிக்கி ஒன்றரை கோடி ரூபாயை இழந்த விவேக் ஓபராய்

பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தமிழ் ரசிகர்களுக்கும் ரொம்பவே பரிச்சயமானவர். குறிப்பாக சுனாமி தாக்கிய சமயத்தில் கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம் என்கிற ஒரு கிராமத்தையே தத்தெடுத்து உதவி செய்த வகையில் அனைவரின் பாராட்டையும் பெற்றவர். சமீப காலமாக விவேகம், லூசிபர், கடவா என தொடர்ந்து தென்னிந்திய படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் பணம் கொடுத்து இவர் ஏமாந்துள்ள நிகழ்வு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விவேக் ஓபராயுடன் நெருங்கி பழகிய தயாரிப்பாளர் மற்றும் திரைப்படத் துறையை சேர்ந்த இருவர் என மொத்தம் மூவர் தாங்கள் புதிய படம் தயாரிப்பதாகவும் அதில் விவேக் ஓபராய் தயாரிப்பாளராக இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்களாம். விவேக் ஓபராயும் கிட்டத்தட்ட தன்னிடம் இருந்து ரூ.1.5 கோடியை தயாரிப்புக்கு என கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் அந்த பணத்தை பட தயாரிப்புக்கு பயன்படுத்தாமல் தங்களது சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்தி வந்தார்கள் என்பது பின்னர் தான் தெரியவந்ததாம்.

அதைத் தொடர்ந்து விவேக் ஓபராயின் ஆடிட்டர் இதுகுறித்து மும்பையில் அந்தேரியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் மூலம் தான் இந்த விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போலீசார் மோசடி செய்த நபர்களை தற்போது தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !