ராதிகா 45 : கேக் வெட்டி கொண்டாட்டம்
தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக நீண்டகாலம் நிலைத்திருப்பது சாதாரண விஷயமல்ல. எத்தனையோ போட்டிகள், சில வரையறைகள் என அனைத்தையும் கடந்து 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தில் நிலைத்திருப்பவர் நடிகை ராதிகா.
அவர் கதாநாயகியாக அறிமுகமான 'கிழக்கே போகும் ரயில்' படம் வெளிவந்து நேற்றுடன் 45 வருடங்கள் முடிந்துவிட்டது. அப்படத்தில் அறிமுகமான போது படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்த பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் ராதிகாவைக் கிண்டல் செய்தனர். கதாநாயகி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு இலக்கணத்தை உடைத்து வந்தவர் ராதிகா.
தொடர்ந்து பல படங்கள், பல நடிகர்கள், விதவிதமான கதாபாத்திரங்கள் என கதாநாயகியாகவே பல வருடங்களைக் கடந்தவர். அதன்பின் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தும் தனி முத்திரை பதித்தவர். இப்போது கூட அவரைத் தங்கள் படங்களில் நடிக்க வைத்தால் ஒரு அழுத்தமான பதிவாக இருக்கும் என நினைக்கும் ரசிகர்களும் உண்டு.
ராதிகாவின் கணவரும் நடிகருமான சரத்குமார் ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டு நீளமான வாழ்த்துப் பதிவிட்டுள்ளார்.