என்ஐஏ விசாரணை வளையமா? - நடிகை வரலட்சுமி விளக்கம்
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து வருபவர் வரலட்சுமி. நடிகர் சரத்குமாரின் மகளான இவரிடம் ஆதிலிங்கம் என்பவர் உதவியாளராக பணியாற்றி உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இவர் வேலையில் இருந்து நின்றுவிட்டார். சமீபத்தில் கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக ஆதிலிங்கம் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, ‛‛தனக்கும் ஆதிலிங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பே அவர் வேலையில் இருந்து நின்றுவிட்டார். என்னிடம் என்ஐஏ விசாரிக்க எந்த நோட்டீஸூம் அனுப்பவில்லை, எனது அம்மாவிடம் மட்டுமே விசாரணை மேற்கொண்டனர்'' என வரலட்சுமி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வரலட்சுமி விளக்கம்
வரலட்சுமிக்கு என்ஐஏ அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியான நிலையில் அதை வரலட்சுமி மறுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை : ‛‛என்ஐஏ எனக்கு சம்மன் அனுப்பியதாக வெளியான செய்தி உண்மையில்லை. ஆதிலிங்கம் என்பவர் என்னிடம் பிரீலான்ஸ் மேலாளராக வேலை பார்த்தார். அந்தகாலக்கட்டத்தில் அவரை போன்று பலரும் என்னிடம் வேலை பார்த்துள்ளனர். அதன் பின்னர் ஆதிலிங்கத்திற்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. அவர் கைதானது எனக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இதுதொடர்பாக தேவைப்பட்டால் அரசுக்கு நான் ஒத்துழைப்பு வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சியே. உண்மை தெரியாமல் பிரபலங்கள் மீது இதுபோன்று செய்திகள் பரப்புவது வருத்தம் அளிக்கிறது,'' என தெரிவித்துள்ளார்.