சினிமாவை விட்டு ஒதுங்கியது ஏன் ? ; கவர்ச்சி நடிகை முமைத் கான்
பத்து வருடங்களுக்கு முன் கவர்ச்சி நடிகை ஆகவும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுபவராகவும் பாலிவுட் முதல் தென்னிந்திய திரை உலகம் வரை ரசிகர்களிடம் அதிரடியான வரவேற்பை பெற்றவர் நடிகை முமைத் கான். குறிப்பாக தமிழில் 'போக்கிரி' படத்தில் 'என் செல்லப்பேரு ஆப்பிள்' மற்றும் கந்தசாமியில் 'என் பேரு மீனாகுமாரி' உள்ளிட்ட பாடல்கள் இவரை தமிழில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆக்கின.
ஆனால் 2016ல் இவர் சந்தித்த ஒரு சிறிய விபத்து காரணமாக அதன் பிறகு இவர் சினிமாவை விட்டு முற்றிலுமாக ஒதுங்கினார். அதன் பிறகு தற்போது ஹைதராபாத்தில் மேக்கப் மற்றும் சிகை படிப்பு தொடர்பான ஒரு பயிற்சி நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் சினிமாவை விட்டு தான் ஒதுங்கியது குறித்து கூறும்போது, “2016ல் ஏற்பட்ட விபத்தில் கிட்டத்தட்ட 15 நாட்கள் நான் கோமாவில் இருந்தேன். மூளையில் சுமார் ஐந்து நரம்புகள் வெடித்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். அதன்பிறகு நான் எந்த கடினமான வேலையையும் செய்யக்கூடாது என அவர்கள் வலியுறுத்தியதால் ஏழு வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கினேன். அந்த சமயத்தில் தான் மேக்கப் மற்றும் புது விதமான சிகை அலங்காரங்கள் குறித்த பல விஷயங்களை கற்றுக்கொண்டு ஹைதராபாத்தில் தனியாக ஒரு இன்ஸ்டியூட் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறேன்” என்று கூறியுள்ளார்.