வாச்சாத்தி சம்பவம் சினிமா ஆகிறது: ரோகிணி இயக்குகிறார்
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வாச்சாத்தி கிராமத்தில், 1992ம் ஆண்டு சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் வாச்சாத்தி கிராமத்தை முற்றிலுமாகச் சுற்றிவளைத்து, வன்முறையைக் கட்டவிழ்த்தனர். குழந்தைகள், பெண்கள் என அனைவரையும் கடுமையாகத் தாக்கியதுடன், 13 வயது சிறுமி உட்பட, 18 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சம்பவத்திற்கு எதிரான வழக்கு 30 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையை உறுதி செய்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டது. இந்த சம்பவத்தை மையப்படுத்தி ஏற்கெனவே சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் தயாரானாது. ஓரிரு ஆவண படங்கள் தயாராகின.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை மையப்படுத்தி நடிகை ரோகிணி படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் திரைக்கதை வசனத்தை எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா எழுதுகிறார். 'ஜெய்பீம்' பட புகழ் லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். ஆந்திராவை சேர்ந்த நடிகை ரோகிணி, தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட சமூக செயல்பாட்டாளராக இருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இருக்கிறார். ஏற்கெனவே பல ஆவணப்படங்களையும் இயக்கி உள்ளார். இப்போது இந்த திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதுபற்றிய முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.