கங்குவா படப்பிடிப்பில் சூர்யாவுக்கு லேசான காயம்
ADDED : 680 days ago
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சரித்திரம் கலந்த பேண்டஸி திரைப்படம் ‛கங்குவா'. திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. ஆக் ஷன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. அப்போது எதிர்பாராத விதமாக ரோப் கேமரா அறுந்து விழுந்தது. இதில் சூர்யா நூலிழையில் தப்பினார். இருப்பினும் அவரது தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. நாளையுடன் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைய இருந்த நிலையில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு சிலநாட்கள் தாமதம் ஆகலாம்.