தமிழ் இயக்குனர்களை மலையாள படம் இயக்க விடுவதில்லை: ஆர்.வி.உதயகுமார் குற்றச்சாட்டு
 
புதுமுகங்கள் நடிக்கும் படம் 'என் சுவாசமே'. மலையாள ஒளிப்பதிவாளர் மணி பிரசாத் இயக்கி உள்ள இந்த படத்தை சஞ்சய் குமார், அர்ஜுன் குமார், ஜனனி தயாரித்துள்ளனர். ஆதர்ஷ், சன்ட்ரா என்ற புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். லிவிங்ஸ்டன், கொல்லபுள்ளி லீலா, அம்பிகா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிஜே இசை அமைத்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது: சுவாசம் இல்லை என்றால் உயிர் இல்லை, அன்பு இல்லை, உணர்வில்லை, சுவாசம் என்பதே உயிர் வாழ முக்கியம். வாழ்வின் முக்கியம் சுவாசம். என் சுவாசமே என அதை டைட்டிலாக வைத்ததற்கு வாழ்த்துகள். இந்த படத்தை மலையாள கலைஞர்கள் இணைந்து உருவாக்கி இருக்கிறார்கள். மலையாளம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்திய அளவில் மலையாளக் கலைஞர்கள் கொண்டாடப்படுகிறார்கள். அவர்கள் கதைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவார்கள். கதையை விட்டு வெளியில் செல்ல மாட்டார்கள். அவர்களிடம் இருந்து தமிழ் சினிமாக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். கலைக்கு மொழி கிடையாது. 
மலையாள கலைஞர்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் அவர்களுக்குத்தான் எங்களை பிடிக்காது. பாசில், பரதன், சாஜி கைலாஷ், சில மேனன்கள் உள்ளிட்ட எத்தனையோ இயக்குனர்கள் தமிழில் படம் இயக்கினார்கள், இயக்கி கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் இயக்குனர்கள் மலையாள படம் இயக்குவதில்லை. காரணம் இயக்க விடுவதில்லை. ஏதாவது படம் கிடைத்து இயக்கினால்கூட ஏதாவது ஒரு பிரச்னையை உண்டாக்கி கெடுத்து விடுகிறார்கள். இது குறித்து மலையாள அம்மா(நடிகர் சங்கம்) கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கு வந்திருக்கும் மலையாள சினிமாவின் மூத்த நடிகை கொல்லப்பள்ளி லீலா இதனை அங்கு சொல்ல வேண்டும். என்றார்.