ஆசையாய் சால்வை கொடுத்த முதியவர் : வெறுப்புடன் வீசி எறிந்த நடிகர் சிவகுமார் : வலைதளங்களில் குவியும் கண்டனம்
காரைக்குடி : வயதான முதியவர் ஒருவர் ஆசையாய் சால்வை கொடுக்க, அதை தூக்கி எறிந்த நடிகர் சிவகுமாருக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
படங்களில் நடிக்காவிட்டாலும் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் மட்டும் சிவகுமார் பங்கேற்று வருகிறார். அப்படி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவர் நடந்து கொள்ளும் விதம் தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது.
ஏற்கனவே ரசிகர் ஒருவர் தன்னுடன் செல்பி எடுக்க முயன்றபோது போனை தட்டிவிட்டார். இது வைரலாகி அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்த சிவகுமார் அந்த ரசிகருக்கு புதிய செல்போன் வாங்கி தந்தார். அதே போல் இன்னொரு நிகழ்ச்சியில் மற்றொரு ரசிகர் அவருடன் செல்பி எடுக்க முயன்றார், அப்போதும் தட்டிவிட்டார்.
இந்நிலையில் காரைக்குடியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட சிவகுமாருக்கு வயதான முதியவர் ஒருவர் ஆசையாய் சால்வை கொண்டு வந்து கொடுத்தார். அதை பிடுங்கி வெறுப்புடன் தூக்கி வீசி எறிந்துவிட்டு சென்றார் சிவகுமார். அந்த இடத்திலேயே அந்த முதியவர் மனம் நொந்து போனார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
தொடர்ந்து சிவகுமார் பொது நிகழ்வுகளில் இதுபோன்று நடந்து கொள்வது ரசிகர்கள் இடையே கோபத்தை வர வழைத்துள்ளது. அவருக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.