லைகாவும், விஷாலும் மத்தியஸ்தம் செய்துகொள்ள கோர்ட் உத்தரவு
விஷாலின் தயாரிப்பு நிறுவனத்திற்கு லைகா நிறுவனம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் 23 கோடி ரூபாய் கடன் வழங்கியது. விஷால் நிபந்தனைபடியும் நடக்க வில்லை. கடனையும் திருப்பித் தரவில்லை என்று லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் விஷால் தாக்கல் செய்துள்ள மனுவில் விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சண்டக்கோழி 2 திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலை வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் கடந்த 2018ம் ஆண்டு 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படம் வெளியிடப்பட்டது.
அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்ச ரூபாயை நான் செலுத்தி உள்ளேன். லைகா நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதால் நிறுவனத்தை மூடிவிட்டு தயாரிப்பாளர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்கும் வாய்ப்பிருப்பதால், நான் செலுத்திய ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராதத் தொகையை வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய்க்கான உத்தரவாதத்தை தருமாறு லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் லைகா தரப்பு வாதத்தையும் ஏற்றுக் கொண்டு இந்த வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி உத்தரவிட்டது.