மலர் டீச்சராக அசினும், ரஜிஷா விஜயனும்
கடந்த 2015ல் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் பிரேமம். இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில், கதாநாயகனாக நிவின்பாலி நடித்திருந்த இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் என மூன்று கதாநாயகிகள் அறிமுகமானவர்கள். மூவருமே இப்போதும் திரையுலகில் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல நிவின்பாலிக்கு அந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததுடன் அதில் நடித்த சின்ன சின்ன நடிகர்கள் அனைவருமே இந்த படத்தின் மூலம் பிரபலமானார்கள். அதே சமயம் மொத்த படத்திலும் சேர்த்து மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் பல்லவி ரசிகர்களிடம் மிகப்பெரிய கவனத்தை பெற்றார்.
அந்த சமயத்தில் நேரம் என்கிற ஒரே ஒரு படத்தை இயக்கியிருந்த அல்போன்ஸ் புத்ரன் பிரேமம் படத்திற்காக ஆடிசன் வைத்து நடிகைகளை தேர்வு செய்தார். அப்போது அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின் ஆகியோரை தேர்வு செய்த அவர் மலர் டீச்சர் கதாபாத்திரத்திற்காக நடிகை அசினை அணுகலாம் என நினைத்தாராம். நாயகன் நிவின்பாலியும் எப்படியாவது அசினுடன் தான் தொடர்பு கொண்டு பேசுவதாக கூறியுள்ளார். ஆனால் மலர் டீச்சர் கதாபாத்திரம் ஒரு தமிழ்ப்பெண் என்பதால் அந்த ஐடியாவை கைவிட்டு விட்டு ஆடிசனில் தேர்வான சாய்பல்லவியை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தாராம் அல்போன்ஸ் புத்ரன்.
அதுமட்டுமல்ல அந்த சமயத்தில் பிரேமம் பட ஆடிஷனில் கலந்து கொண்டவர்தான் சமீபத்தில் ஜெய்பீம், கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகை ரஜிஷா விஜயனும். தனது படத்திற்கு மூன்று கதாநாயகிகள் தான் தேவை என்றாலும் அந்த சமயத்தில் ரஜிஷா விஜயன் போன்ற அழகான திறமை வாய்ந்த இன்னும் ஒரு சிலரையும் மூன்று கதாநாயகிகளில் ஏதோ ஒரு கதாபாத்திரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என கூடுதலாக ஆடிசனில் தேர்வு செய்து வைத்தாராம் அல்போன்ஸ் புத்ரன். ஆனால் ரஜிஷாவுக்கு பதிலாக சாய் பல்லவிக்கு தான் மலர் கதாபாத்திரம் கிடைத்தது. அதேசமயம் ரஜிஷா விஜயனும் அதன் பிறகு சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் என்பதில் எனக்கு சந்தோசமே என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.