எதிர்பாராமல் வந்த இரண்டு 100 கோடி படங்கள்
2024ம் ஆண்டில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வரப் போகிறது என்று வருடத்தின் ஆரம்பத்தில் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் ஆறு மாத காலங்கள் சொல்லிக் கொள்வது போல அமையவில்லை. 100 கோடி வசூல் படங்கள் அமையவேயில்லை. அந்த நிலையை 'அரண்மனை 4' படம் மாற்றியது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் சொன்னார்கள்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'இந்தியன் 2' படம் 500 கோடி வசூலையாவது தாண்டும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படத்தின் வசூல் இதுவரையிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 150 கோடியைக் கடந்திருக்கலாம் என்பது தகவல்.
இந்நிலையில் திரையுலகத்திலும், ரசிகர்களாலும் சந்தேகமாகப் பார்க்கப்பட்ட இரண்டு படங்கள் எதிர்பாராமல் 100 கோடி வசூலைக் கடந்து ஆச்சரியப்படுத்தியுள்ளன. விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 'மகாராஜா', தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'ராயன்' ஆகிய இரண்டு படங்களும் 100 கோடி வசூலைக் கடந்தன.
'மகாராஜா' படம் விஜய் சேதுபதியின் முதல் 100 கோடி படம். 'ராயன்' படம் 'ஏ' சான்றிதழ் பெற்ற தமிழ்ப் படங்களில் 100 கோடி வசூலைத் தொட்ட ஒரு படம் என ஆச்சரிய வசூலை அள்ளியுள்ளன. இந்த இரண்டு படங்கள்தான் திரையுலகத்தில் 'டாக் ஆப் த சினிமா' வாக உள்ளன.