மஞ்சுவாரியரிடம் 5 கோடி இழப்பீடு கேட்டு ‛புட்டேஜ்' பட நடிகை நோட்டீஸ்
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வரும் நடிகை மஞ்சுவாரியரின் நடிப்பில் தற்போது புட்டேஜ் என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது. ஷைஜு ஸ்ரீதரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் ஒரு கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. இதில் நடிகை ஷீத்தல் தம்பி என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளில் நடித்தபோது தனக்கு பலமாக அடிபட்டதாகவும் இதனால் தற்போது வரை தன்னால் வேறு படங்களில் நடிக்க முடியாமல், மருத்துவ சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார் ஷீத்தல் தம்பி.
மேலும் இந்த காட்சிகளை படமாக்கும்போது முறையான பாதுகாப்பு வசதிகள் எதுவும் இன்றி படமாக்கியதால் தான் தனக்கு இந்த நிலை ஏற்பட்டது என்றும் இதுவரை தயாரிப்பு தரப்பிலிருந்து தனக்கு சிகிச்சைக்காக பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து தனக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என இந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஷீத்தல் தம்பி. நடிகை மஞ்சு வாரியரும் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.