உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துணை முதல்வர் உதயநிதிக்கு வாழ்த்து சொல்லாத விஜய்

துணை முதல்வர் உதயநிதிக்கு வாழ்த்து சொல்லாத விஜய்


நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், சமூக வலைத்தளங்களில் மட்டுமே தற்போது அரசியல் நடத்தி வருகிறார். வாழ்த்துகள் சொல்வது, இரங்கல் சொல்வது என கடந்த ஒரு வருட காலமாகவே அதைத் தவறாமல் செய்து வருகிறார். அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ள அவரது கட்சியின் முதல் மாநாட்டிற்குப் பிறகுதான் விஜய் தீவிர கள அரசியலில் இறங்குவாரா என்பது தெரியும்.

முன்னாள் நடிகர், தயாரிப்பாளராக இருந்த உதயநிதி, விளையாட்டுத் துறை அமைச்சராகி தற்போது துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார். அவருக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் மற்ற கலைஞர்கள் என தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலிருந்தும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால், தமிழக வெற்றிக்கழகத் தலைவரான விஜய் அரசியல் கட்சித் தலைவராக இல்லாமல் ஒரு நடிகராவது வாழ்த்துகளைச் சொல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரையிலும் அவர் எந்த ஒரு வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.

அதே சமயம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டி நேற்று பதிவிட்டிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் வெற்றி பெற்ற நடிகர் பவன் கல்யாணுக்குக் கூட வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிறந்தநாள் மே மாதம் வந்த போது வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு முன்பு மார்ச் மாதம் பிறந்தநாள் கொண்டாடிய தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளுக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது உதயநிதி துணை முதல்வரானதற்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது அரசியல் வட்டாரங்களிலும், சினிமா வட்டாரங்களிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !