நான் ஒரு சின்ன நடிகர் : பாலிவுட் நடிகரை அதிர வைத்த பஹத் பாசில்
கடந்த வருடம் பாலிவுட்டில் கில் என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நிகில் நாகேஷ் பட் என்பவர் இயக்கிய இந்தப் படத்தில் வில்லனாக நடித்த ராகவ் ஜூயல் தனது நடிப்பிற்காக ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றார். இந்த படமும் மொழி தாண்டி பல திரையுலக பிரபலங்களால் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் தனது நடிப்பை பாராட்டி நடிகர் பஹத் பாசிலிடமிருந்து எதிர்பாராத விதமாக தன்னை தேடி வந்த வாழ்த்து குறித்தும் பஹத் பாசிலின் அணுகுமுறை குறித்தும் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிலாகித்துக் கூறியுள்ளார் நடிகர் ராகவ் ஜூயல்.
இது குறித்து அவர் கூறும்போது, “படம் வெளியான பிறகு சில நாட்கள் கழித்து நடிகர் பஹத் பாசிலிடம் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் அவர் நான் பஹத் பாசில்.. ஜஸ்ட் ஒரு சிறிய நடிகர்.. கில் படம் பார்த்தேன்.. உங்களது நடிப்பு என்னை பிரமிக்க வைத்து விட்டது என்று கூறியிருந்தார். பஹத் பாசில் நடித்த ஆவேசம் படத்தை பார்த்துவிட்டு அவரது ரசிகராகவே மாறியவன் நான். அவர் எனக்கு பாராட்டு செய்தி அனுப்பியதுடன் தன்னை மிகச் சிறிய நடிகர் என்று குறிப்பிட்டுக் கொண்டது என்னை இன்னும் வியப்பில் ஆழ்த்தியது” என்று கூறியுள்ளார் ராகவ் ஜூயல்.