உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அதிகாலை காட்சிக்கு மாற்றாக பிரிமீயர் காட்சி: ஆரம்பமாகும் புது டிரென்ட்

அதிகாலை காட்சிக்கு மாற்றாக பிரிமீயர் காட்சி: ஆரம்பமாகும் புது டிரென்ட்


2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த அஜித்தின் 'துணிவு' படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சி நடந்த போது, ரசிகர் ஒருவர் லாரி மீதிருந்து விழுந்து அகால மரணமடைந்தார். அதன்பிறகு அதிகாலை சிறப்புக் காட்சிகளை நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை.

புதிய படங்கள் வெளியாகும் நாட்களில் காலை 9 மணிக்கு மட்டுமே காட்சிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. டாப் நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது கடந்த சில வருடங்களாக அதிகாலை காட்சியைப் பார்த்துப் பழக்கப்பட்ட ரசிகர்களுக்கு 9 மணி வரை காத்திருக்க பொறுமையில்லாமல் இருக்கிறது.

இதனிடையே, தமிழ் சினிமாவில் புது டிரென்ட் ஆக பிரிமீயர் காட்சி நடைமுறை இன்று ஆரம்பமாகிறது. அதுவும் நேரடி தமிழ்ப் படங்களுக்கு ஆரம்பமாகாமல் தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வந்துள்ள 'லக்கி பாஸ்கர்' படம் மூலம் ஆரம்பமாகிறது. இந்த மாதிரியான பிரிமீயர் காட்சிகள், 'பெய்டு பிரிமீயர் காட்சிகள்' என அமெரிக்காவில் நடைபெறுவது வழக்கம். அதைத் தற்போது இங்கு கொண்டு வந்துள்ளார்கள்.

இன்று மாலை மற்றும் இரவுக் காட்சிகளாக துல்கர் சல்மான் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' படம் 11 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட மாநகரங்களில் இந்த பிரிமீயர் காட்சி நடைபெற உள்ளது. இந்த டிரென்ட்டை தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும் பின்பற்றுவார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.

அதிகாலை காட்சிகளுக்கு இனிமேல் அரசு அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, இது போன்ற பிரிமீயர் காட்சிகளை நடத்தி அதிக ஆர்வத்துடன் படம் பார்க்கத் துடிக்கும் ரசிகர்களிடமிருந்து வசூல் செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு. இதையே ரசிகர் மன்ற காட்சிகளாகவும் நடத்தினால் 1000, 2000 என அதிக டிக்கெட் கட்டணம் வைத்தும் வசூலிக்கலாம். மலையாள நடிகர் நடித்த தெலுங்குப் படத்தைத் தயாரித்த தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் இப்படி ஒரு புது வழியை காட்டியுள்ளது.

இந்த வழியை தமிழ் சினிமாத் துறையினரும் பின்பற்றுவார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !