உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னை சர்வதேச திரைப்பட விழா: 12ம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடக்கிறது

சென்னை சர்வதேச திரைப்பட விழா: 12ம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடக்கிறது


சென்னையில் செயல்பட்டு வரும் இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு தமிழக அரசின் உதவியுடன் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. அந்த வகையில் 22வது சர்வதேச திரைப்பட விழா வருகிற 12ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது.

12ம் தேதி பிவிஆர் சத்யம் திரையரங்கில் விழா தொடங்குகிறது. தொடக்க விழாவில், வெனிஸ் பட விழாவில், கோல்டன் லயன் விருதுபெற்ற 'தி ரூம் நெக்ஸ்ட் டோர்' என்ற படம் திரையிடப்படுகிறது. இறுதி நாளான 19ம் தேதி, கேன்ஸ் விழாவில் தங்கப்பனை விருது பெற்ற 'அனோரா' என்ற படம் திரையிடப்படுகிறது. சென்னை பிவிஆர் சத்யம், ஐநாக்ஸ் திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படுகிறது.

மொத்தம் 65 நாடுகளிலிருந்து 123 படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் கேன்ஸ் விழாவில் விருதுபெற்ற மற்றும் பரிந்துரைக்கப்பட்ட 11 திரைப்படங்கள், வெனிஸ் விழாவில் விருது வாங்கிய 3 படங்கள், பெர்லின் விழாவில் பங்கேற்ற 8 திரைப்படங்களும் அடங்கும். இந்த ஆண்டு 'மாஸ்டர் டாக்ஸ்' என்ற நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்படுகிறது. அதில் படங்கள் திரையிடப்பட்டு அந்தப் படங்களின் இயக்குநர்களுடன் உரையாடல் நடக்கும்.

தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவிற்கு 25 படங்கள் விண்ணப்பித்துள்ளது. இவற்றில் இருந்து 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுகிறது. இதில் சிறந்த படம், சிறந்த இயக்குனருக்கு விருது வழங்கப்பட இருக்கிறது.

இந்த தகவல்களை விழா ஒருங்கிணைப்பாளர் ஏவிஎம். கே.சண்முகம், தலைவர் சிவன் கண்ணன், துணைத்தலைவர் ஆனந்த் ரங்கசாமி ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !