பாலிவுட் இசை அமைப்பாளர் மீது பெங்காலி பாடகி பாலியல் புகார்
பிரபல பெங்காலி முன்னணி திரைப்பட பாடகி லக்னஜிதா சக்ரவர்த்தி. இவர் பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ராஜேஷ் ரோஷன் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் மும்பையில் வசித்த போது ராஜேஷ் ரோஷன் அவரது இல்லத்திற்கு என்னை அழைத்தார். அவர் அழைப்பை ஏற்று நானும் சென்றேன். அவரது அறையில் நான் உட்கார்ந்தேன். அந்த அறையில் அனைத்து விதமான இசை கருவிகளும் இருந்தன.
என் அருகில் அவர் அமர்ந்திருந்தார். ஐ-பேடில் என்னுடைய பாடலை காண்பிக்கும்படி அவர் கேட்டார். உடனே நான் ஐ-பேடில் அதை தேடிக் கொண்டிருந்தபோது அவர் என் அருகில் நெருங்கி வந்தார். பின்பு அவர் என்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினார். உடனே நான் எதுவும் பேசாமல் எழுந்து வந்துவிட்டேன். அதன்பிறகு அந்த சம்பவம் குறித்து நான் பெரிதாக பேசவில்லை. அழவும் இல்லை. ஏனென்றால் அது அவருடைய தவறு. என்னுடைய தவறில்லை. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
ராஜேஷ் ரோஷன் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர், இயக்குநர் ராகேஷ் ரோஷனின் தம்பி மற்றும் ஹிரித்திக் ரோஷனின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.