திரில்லர் படத்தில் பள்ளி ஆசிரியையாக நடிக்கும் பூமிகா
'பிரதர்' படத்தை தொடர்ந்து பூமிகா நடிக்கும் புதிய தமிழ் படம் 'ஸ்கூல்'. அவருடன் யோகிபாபு, கே.எஸ்.ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மற்றும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். வைத்தீஸ்வரன் படத்தை இயக்கிய ஆர்.கே.வித்யாதரன் இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கிறர்.
படம் பற்றி வித்யாதரன் கூறும்போது “இது ஒரு உளவியல் ரீதியான திரில்லர் படம். இன்றைய பள்ளி மாணவ மாணவிகளின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் கொலை, தற்கொலை, விபத்து, கலவரம் போன்ற பல முக்கியமான கிரைம் சம்பவங்களை பற்றி அலசி ஆராயும் விதமாக விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள்ளோம்.
அதேநேரத்தில் மனித உயிரின் பிரயாணத்தை பற்றியும் ஆவிகள் பிசாசுகள் பற்றிய நம்பிக்கைகள் பற்றியும் மிக தீவிரமாக சொல்கிறோம். மாணவ மாணவிகளை உளவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்யும் ஆசிரியராக பூமிகாவும், மாணவர்களை எளிமையாக பழகி அவர்களை நல்வழிக்கு நடத்திச் சொல்லும் ஆசிரியராக யோகி பாபுவும், ஸ்கூலில் நடக்கும் கிரைம் சம்பவங்களை இன்வேஸ்டிகேஷன் செய்யும் போலீஸ் ஆபீஸராக கேஎஸ் ரவிக்குமாரும் நடித்திருக்கிறார்கள்.