கமல்ஹாசன் வந்த பிறகு 'இந்தியன் 3' பஞ்சாயத்து
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'இந்தியன் 2' படம் தோல்வியைத் தழுவியது. அப்படத்திற்கான மூன்றாம் பாகமும் தயாராகி இந்த வருடம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் 'இந்தியன் 3' படத்தின் வேலைகளை இயக்குனர் ஷங்கர் இன்னும் முடித்துத் தரவில்லை. தெலுங்கில் அவர் இயக்கி வந்த 'கேம் சேஞ்ஜர்' படத்திற்காக அவர் சென்றுவிட்டார்.
'கேம் சேஞ்ஜர்' படம் இந்த வாரம் ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது. 'இந்தியன் 3' படத்தின் வேலைகளை முடிக்காமல் 'கேம் சேஞ்ஜர்' படத்தைத் தமிழகத்தில் திரையிட அனுமதிக்கக் கூடாது என்று தமிழ்த் திரைப்பட சங்கங்களிடம் லைகா நிறுவனம் புகார் அளித்திருந்தது. அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் உள்ளார். அவர் திரும்பி வந்த பின் 'இந்தியன் 3' படத்தின் பஞ்சாயத்தை வைத்துக் கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அதை லைகா நிறுவனமும் ஏற்றுக் கொண்டதாகவும் அதனால், 'கேம் சேஞ்ஜர்' படத்தைத் தமிழகத்தில் திரையிட லைகா எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிகிறது.