உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டு வருடம் முடிவதற்குள்ளேயே விவாகரத்தை அறிவித்த அபர்ணா வினோத்

இரண்டு வருடம் முடிவதற்குள்ளேயே விவாகரத்தை அறிவித்த அபர்ணா வினோத்

2023 பிப்ரவரியில் காதல் திருமணம் செய்து கொண்ட மலையாள நடிகை அபர்ணா வினோத், இரண்டு வருடம் முடிவதற்குள்ளாகவே தனது விவாகரத்தை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். மலையாளத்தில் நிவின்பாலி நடித்த நண்டுகளுடே நட்டில் ஒரிடவேள என்கிற படத்தில் அறிமுகமாகி, கோகினூர் என்கிற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். தமிழில் விஜய் நடித்த பைரவா திரைப்படத்தில் நாயகி கீர்த்தி சுரேஷின் தோழியாக படத்தின் திருப்புமுனை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக நடித்திருந்தார் அபர்ணா வினோத். அதை தொடர்ந்து நடுவன் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

கடந்த 2022-ல் ரினில் ராஜ் என்பவரை தான் காதலிப்பதாக அறிவித்த அபர்ணா வினோத் அப்போது, “உன்னை என்று முதன்முதலாக சந்தித்தேனோ, அன்று முதல் எல்லாமே மாறத் துவங்கியது” என்று காதலர் ரினில் ராஜ் பற்றி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இரண்டு வருடங்களுக்குள் அந்த காதல் திருமணம் முடிவுக்கு வந்து அவர் இப்படி விவாகரத்தை நோக்கி நகர்ந்துள்ளது நிஜமாகவே ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்.

இது குறித்து அபர்ணா வினோத் கூறும்போது, “தீவிரமான யோசனைக்கு பிறகு தான் என்னுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவை எடுத்துள்ளேன். இது ஒன்றும் அவ்வளவு ஈஸியான முடிவு அல்ல என்றாலும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரு சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன். என்னுடைய திருமணம் உணர்ச்சிகரமாக முடிவெடுக்கப்பட்டு கடினமான சோதனைகளை கடந்து வந்துள்ளது. இதை இப்போதே முடிவுக்கு கொண்டு வந்து என்னுடைய முன்னேற்றத்தை நோக்கி நகர வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !