பழசை மறக்காத சூரி
சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் சூரி. அதற்கு முன் பல படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் தான் அவரை அடையாளம் காட்டியது. தொடர்ந்து பல படங்களில் காமெடியனாக கலக்கிய சூரி தற்போது ஹீரோவாக பயணித்து வருகிறார். விடுதலை 1 மற்றும் 2, கருடன், கொட்டுகாளி ஆகிய படங்களில் லீடு ரோலில் நடித்து இன்று முன்னணி ஹீரோவாக மாறி இருக்கும் சூரி தற்போது 'மாமன்' படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார். இதுதவிர ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சூரி தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு கட்டிடத்தில் கயிற்றில் தொங்கிய படி தொழிலாளி ஒருவர் பெயிண்டிங் செய்வதை எதிரே உள்ள ஓட்டலில் தங்கி இருந்த சூரி அதை வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார். வீடியோ உடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சுவர்களில் நிறங்களை பதித்தேன். இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன் என்று சூரி பதிவிட்டிருக்கிறார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சூரி பெயிண்டிங் வேலை செய்பவராக இருந்துள்ளார். அதன் பிறகு லைட் மேன் ஆக சினிமாவில் நுழைந்து பின்னர் காமெடி நடிகராகி, இன்று ஹீரோவாக வளர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில் தான் செய்த பழைய தொழிலை மறக்காமல் வீடியோவாக சூரி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.