தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு
வைகை படத்தை இயக்கிய எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில், ஆரி அர்ஜுனன் நடிக்கும் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லர் படமான “4த் ப்ளோர்” பிப்ரவரி 27ல் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குனர் சேரன் பரபரப்பாக பேசுகையில், இந்த படத்தின் தயாரிப்பாளர் திருப்பூரை சேர்ந்தவர். திருப்பூர் என்று சொன்னாலே எனக்கு நிறைய நினைவுகள் மனசுக்குள் வந்து போகும்.
திருப்பூர் தயாரிப்பாளர்களுடன் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு பல ஆண்டுகளாக இருந்தது. இன்று பலர் சினிமாவை வேறு நோக்கங்களுக்காக அணுகுகிறார்கள். ஆனால் நீங்கள் முழுக்க முழுக்க சினிமாவை மட்டுமே நம்பி, அதையே நோக்கமாக கொண்டு வந்திருக்கிறீர்கள். அது எனக்கு சந்தோஷம்.
இந்த படத்தின் டைட்டில் டிசைன் சிறப்பாக உள்ளது. 4த் ப்ளோர் என்ற வார்த்தைக்கு இவ்வளவு கம்பீரமும், அழகும், அர்த்தமும் கொடுத்திருக்கிறார்கள். இந்த படத்தில் பணியாற்றும் பலரை நான் தனிப்பட்ட முறையிலும் அறிவேன். ஆரி என் நண்பர், என் மாணவர், என் படத்தில் நடித்தவர். எந்த விதமான பின்புல ஆதரவுமில்லாமல், அவருடைய உழைப்பை மட்டுமே நம்பி இங்கு நிற்கும் மனிதர். அந்த வகையில், இந்த படம் அவருக்கு ஒரு அடையாளமாகவும், ஒரு நம்பிக்கையாகவும் அமைய வேண்டும். எனக்கு ஜிம் பயிற்சியாளராக அவர் இருந்தார். அவரால்தான் இன்றைக்கும் ஒரு குறிப்பிட்ட எடையுடன் இருக்கிறேன்.
ஒரே நேரத்தில் பல படங்கள் ரிலீஸ் ஆவது பல தயாரிப்பாளர்களுக்கு பிரச்னை. இந்த விஷயத்தில் நல்ல முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஒரு தயாரிப்பாளர் போட்ட பணத்தை எடுக்க பெரிய பிரச்னை இருக்கிறது. மனசாட்சியை அடகு வைத்து தயாரிப்பாளர்களை இயக்குனர்கள் குழியில் தள்ளுவது போல இருக்கிறது. சிறு முதலீட்டு படங்களுக்கு 3 மாதம் ஒதுக்கி கொடுக்க, மீதமுள்ள மாதம் மற்ற படங்களை திரையிடுங்கள்'' என்றார்.