உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கதாநாயகனாக மாறிய பிரேமலு காமெடி நடிகர்

கதாநாயகனாக மாறிய பிரேமலு காமெடி நடிகர்

கடந்த வருடம் பிப்ரவரியில் மலையாளத்தில் வெளியான அருமையான காதல் கதையான பிரேமலு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கேரளாவில் மட்டுமல்ல தமிழக இளசுகளையும் இந்த படம் ரொம்பவே கவர்ந்தது. குறிப்பாக இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த மாமிதா பைஜு தனது நடிப்பாலும் க்யூட்டான எக்ஸ்பிரஷன்களாலும் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார். அது மட்டுமல்ல அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த நஸ்லேன் ஓரளவுக்கு ரசிகர்களை கவர்ந்தாலும் அவருக்கு நண்பராக படம் முழுவதும் பயணிக்கும் இன்னொரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த சங்கீத் பிரதாப் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

இதனை தொடர்ந்து அவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. அப்படி சமீபத்தில் வெளியான ப்ரொமான்ஸ் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அவர் தற்போது மோகன்லாலுடன் இணைந்து ஹிருதயபூர்வம் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இடையில் ஒரு விபத்தில் சிக்கி காயம் அடைந்து அதிலிருந்து தற்போது மீண்டு வந்துள்ள சங்கீத் பிரதாப்புக்கு அடுத்த கட்டமாக கதாநாயகன் பிரமோஷன் கிடைத்துள்ளது.

அந்த வகையில் மெடிக்கல் மிராக்கிள் என்கிற படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார் சங்கீத் பிரதாப். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. கதாநாயகனுக்கு ஏற்படும் வித்தியாசமான நோய் காரணமாக ஏற்படும் கலாட்டாக்களையும், குழப்பங்களையும் மையப்படுத்தி இந்த படத்தின் கதை நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !