14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'குபேரா'. பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் இப்படம் ஜுன் 20ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் சிங்கள் 'போய் வா நண்பா' ஏப்ரல் 20ம் தேதி வெளியாகிறது.
அதற்கான முன்னோட்ட குறு வீடியோ ஒன்றை சில தினங்களுக்கு முன்பு ஐந்து மொழிகளிலும் வெளியிட்டனர். முதல் கேட்பிலேயே பாடல் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் இப்பாடலை தனுஷ் பாட, விவேகா எழுதியுள்ளார். மற்ற மொழிகளில் வெவ்வேறு பாடகர்கள் பாடியுள்ளார்கள். தனுஷின் படங்களில் பாடல்கள் எப்போதுமே நல்ல வரவேற்பைப் பெறும். அவரது ஆரம்ப காலப் படங்களிலிருந்து இதைக் குறிப்பிடலாம்.
தனுஷ் - தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில் இதற்கு முன்பு வெளிவந்த படம் 'வேங்கை'. ஹரி இயக்கத்தில் தமன்னா, ராஜ்கிரண் மற்றும் பலர் அப்படத்தில் நடித்திருந்தனர். அதிக வரவேற்பைப் பெறாத படமாக இருந்தாலும் அப்படத்தில் பாடல்கள் நன்றாகவே இருந்தன. அந்தப் படத்திற்குப் பிறகு 14 வருடங்களுக்குப் பிறகு 'குபேரா' படம் மூலம் தனுஷ் - தேவிஸ்ரீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அதனால், இந்தப் படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களை ஹிட் ஆகவே கொடுத்திருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.