‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா?
இசையமைப்பாளர் வித்யாசாகர் 63வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் கோலிவுட்டில் கொடி பறந்த காலத்தில், தனக்கென தனி பாதை அமைத்து ஜெயித்தவர் வித்யாசாகர். ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தாலும், வளர்ந்தது சென்னையில் தான். தாத்தாவும், தந்தையும் இசைக் கலைஞர்கள் என்பதால் 10வயதில் இருந்தே முறைப்படி இசையை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். டக்கென பெரிய இசையமைப்பாளர் ஆகவில்லை. பல்வேறு முன்னணி இசைக்கலைஞர்களிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார்.
1989ம் ஆண்டு வெளியான பூமனம் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் கொடி கட்டி பறந்தார். வித்யாசாகரின் மெலோடி பாடல்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. என்னால் குத்து பாடல்களும் தர முடியும் என அதிலும் சாதித்தார். 225க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்தவர், கே.விஸ்வநாத் இயக்கிய ஸ்வரபிசேகம் என்ற தெலுங்கு படத்துக்காக தேசிய விருது பெற்றார். பல்வேறு விருதுகளை அள்ளியிருக்கிறார். இப்போது அவர் மகன் ஹர்ஷவர்தன் நடிகராக அறிமுகம் ஆக உள்ளார்.
ஆயிரக்கணக்கான மேடைகளில் இசையமைப்பாளர் வித்யாசாகர் பாடல்களை லஷ்மண்ஸ்ருதி இசைக்குழு மூலம் பாடியவர் மாலதி. பல பாடல்களை அவரும் வித்யாசாகர் இசையில் பாடியிருக்கிறார். அவரிடம் வித்யாசாகர் குறித்தும், அவரின் பாடல்கள் குறித்தும் கேட்டோம். அவர் கூறியது...
மறக்கவே மாட்டேன்
''முதலில் அவர் இசையில் நான் பாடிய பாடல்களை பட்டியலிடுகிறேன். அதில் முக்கியமானது கமல்ஹாசனின் அன்பே சிவம் படத்தில் இடம் பெற்ற நாட்டுக்கொரு நாகரீக சேதி சொல்ல என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் இது. காரணம், சினிமாவில் நான் பாடிய முதல் டூயட் பாட்டு. அதுவும் முதல் பாடலே கமல்ஹாசனுக்கு அமைந்தது அதிர்ஷ்டம். சின்ன பிட் பாடினாலும் அந்த பாடலை கொடுத்த வித்யசாகரை மறக்கவே மாட்டேன்.
அதேபோல், கார்மேகம் படத்தில் வரும் ஸ்ரீரங்கபட்டினத்தில் சிங்காரியாக நான் பிறந்தேன் பாடலைதான், முதன்முதலில் வித்யாசாகர் இசையில் பாடினேன். மம்முட்டிசார் நடித்த படம். 2002ல் வெளியானது. அடுத்து வர்ணஜாலம் படத்தில் மதமதமதன மறைஞ்சுது நிற்கிறீயே என்ற பாடல் செம குத்து பாடல். ஸ்ரீதர் மாஸ்டர் டீமுடன் ஆடியிருப்பார். பல மேடைகளில் இந்த பாடலை உற்சாகமாக பாடியிருக்கிறேன்.
பார்த்திபன் கனவு படத்தில் சீர்காழி சிவசிதம்பரத்துடன் நான் இணைந்து பாடிய முத்து முத்த பெஞ்ச மழை பாடல், அந்த காலத்தில் பலரையும் ஆட வைத்த குத்து பாடல். ஸ்ரீகாந்த் நடித்த அந்த படத்தில், இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் செம ஆட்டம் போட்டு இருப்பார். இப்போதும் பல விழாக்களில் இந்த பாடலுக்கு ஆடுபவர் பலர். நிறைய கல்வி நிறுவனங்களில், விசேஷ வீடுகளிலும் இந்த பாடல் ஒலித்தது.
மெட்லி ஒலி திருமுருகன் இயக்கத்தில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மாணவன் படத்தில் ஜெயமூர்த்தியுடன் இணைந்து கட்டி பிடிக்கும் கரடியை நம்புங்க, எட்டி மிதிக்கும் யானையை நம்புங்க என்ற பாடலையும் பிடிக்கும். வித்யாசாகர் மெலோடி மட்டுமல்ல, இப்படிப்பட்ட பல துள்ளல் இசை பாடல்களையும் கொடுத்து இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். இந்த பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர், சுஜா சூப்பராக ஆடியிருப்பார்கள்.
எனக்கு பெயர் கிடைத்தது
அஜித் நடித்த பரமசிவம் படத்தில் உண்டி வில்ல கண்ணில் வெச்ச, உறுமி மேளம் கண்ணில் வெச்ச பாடல் பேவரைட். அஜித், லைலா டான்ஸ், வித்யாசாகர் இசையில் அந்த பாடல் கலர்புல்லாக இருக்கும். அஜித் படத்தில் நான் பாடியதும் மகிழ்ச்சி.
தங்கர்பச்சான் இயக்கத்தில் பார்த்திபன் நடித்த தென்றல் படத்தில் ஒரு திருவிழா பின்னணியில் வரும் பத்திரகோட்டை மாமா பட்டனி போடலாமா பாடலை, நானும் மாணிக்க விநாயகனும் இணைந்து பாடியிருப்போம். அந்த பாடலில் ஒருவித கிராமிய இசை கலக்கும். இதெல்லாம் அவர் இசையில் நான் பாடிய பாடல்களில் எனக்கு பிடித்தது. இப்படி பல பாடல்களை அவர் இசையில் பாடியிருக்கிறேன். எனக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்தார். அவரின் பாடல்களால் எனக்கும் நல்ல பெயர் கிடைத்தது என்கிறார்.
வித்யாசாகர் பாடல் இல்லாமல் இருக்காது
தொடர்ந்து பேசும் மாலதி ''எங்கள் இசைக்குழுவில் வித்யாசாகர் பாடல் இல்லாமல் இருக்காது. மெலோடியும் இருக்கும், குத்து பாடலும் இருக்கும். குறிப்பாக, மச்சான் மீசை வீச்சு அறுவா, சந்திரமுகியில் வந்த ரா ரா பாடல் உட்பட அனைத்து பாடல்களையும் மேடைகளில் பாடியிருக்கிறோம். அதேபோல் தில், துாள், கில்லியில் இடம் பெற்ற பாடல்களையும் தவறாமல் பாடுவோம். மதுரை வீரன் தானே என்ற பாடலை பாடும்போது கை தட்டல் பறக்கும். ஒரு சண்டைக்காட்சிக்கு இந்த பாடலை பின்னணி இசையாக கொடுத்து இருப்பார் வித்யாசாகர். பரவை முனியம்மா எங்கள் குழுவுடன் இணைந்து பல இடங்களில் பாடியிருக்கிறார். அதேபோல் கொடுவா மீசை அறுவா பார்வையும் நேயர் விருப்பமாக இருக்கும். கில்லி படத்தில் இடம் பிடித்த அப்படி போடு பாடலை எத்தனை கச்சேரிகளில் பாடினோம் என்ற கணக்கே இல்லை'' என்கிறார் மாலதி
மனதை வருடிய மெலோடி
மெலோடி கிங் என்று சொல்லப்படும் வித்யாசாகரின் மெல்லிசை பாடல்களில், மலரே மவுனமா(கர்ணா), என்ன தவம் செய்தனை (பார்த்திபன் கனவு), வா வா என் தேவதையே (அபியும் நானும்). காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் (பூவெல்லாம் உன்வாசம்). ஆசை, ஆசை இப்போது (துாள்). பூ வாசம் புறப்படும் பெண்ணே (அன்பே சிவம்), டிங்டாங் கோயில் மணி(ஜி), பொய் சொல்லக்கூடாது (ரன்), தேன் தேன் (குருவி), தாலாட்டும் காற்றே வா( பூவெல்லாம் உன்வாசம்), தந்தன தந்தன தை மாசம் (தவசி), ரா ரா(சந்திரமுகி), காற்றின் மொழி(மொழி), உன் சமையல் அறையில் (தில்), தேரடி வீதியில் (ரன்), ராதை மனமே (சினேகிதியே), நூறாண்டுக்கு ஒருமுறை (தாயின் மணிக்கொடி) பாடல்களும் முக்கியமானவை என்கிறார்கள் இசை ரசிகர்கள்.
இதுபோன்று வித்யாசாகரின் இசையில் வெளிவந்த படங்களில் உங்களுக்கு பிடித்த பாடல்கள் எது என்று கீழே கமென்ட்டில் சொல்லுங்க...