கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம்
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் மலையாளம் தாண்டி தமிழ் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அந்த படத்தில் நாயகியாக நடித்த மமிதா தற்போது பெரிய அளவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக மாறிவிட்டார். அந்த படத்தின் கதாநாயகன் நஸ்லேன் தவிர இவர்களது நண்பராக நடித்திருந்த நடிகர் சங்கீத் பிரதாப்பும் தற்போது பிஸியான நடிகராக மாறிவிட்டார். இவர் நடிகர் என்றாலும் அடிப்படையில் ஒரு படத்தொகுப்பாளர்.
கடந்த 2023ல் மலையாளத்தில் 96 புகழ் கவுரி கிஷன் நடிப்பில் வெளியான மிஸ் லிட்டில் ராவுத்தர் என்கிற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததுடன் இந்த படத்திற்கு படத்தொகுப்பாளராகவும் சங்கீத் பிரதாப் பணியாற்றியிருந்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் 2023க்கான கேரள அரசு விருதுகள் வழங்கப்பட்ட போது சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது மிஸ் லிட்டில் ராவுத்தர் படத்திற்காக சங்கீத் பிரதாப்பிற்கு வழங்கப்பட்டது.
இந்த விருதை பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியுடன் அன்றைய இரவு அந்த விருதை கட்டிப்பிடித்தபடி இவர் படுக்கையில் படுத்து உறங்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு கலைஞனுக்கு மிகப் பெரிய அங்கீகாரமான பாராட்டு என்பதே விருதுகள் தான். அப்படி கேரள அரசின் ஒரு உயரிய விருதை முதன்முதலாக பெற்றிருப்பதாலோ என்னவோ அது தன் கையை விட்டு அகன்று விடக்கூடாது என தூங்கும்போது கூட அருகில் வைத்துக் கொண்டு தூங்கியுள்ள சங்கீத் பிரதாப்பை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.