தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு!
மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் கமல் நடித்துள்ள படம் ‛தக் லைப்'. இதில் சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், ஜோஜு ஜார்ஜ், அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதியின் ரெட் ஜெயன்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.
கேங்ஸ்டரான கமலின் உயிரை சின்ன வயது சிறுவன் சிம்பு காப்பாற்றுவார் போல் தெரிகிறது. அதன்பின் சிம்புவை தன் மகன் போல் வளர்க்கிறார். ஒருக்கட்டத்தில் இவர்களுக்குள் பகை வர நீயா... நானா... பார்த்துவிடலாம் என மோதுகின்றனர். படத்தின் டிரைலர் இதை தான் சொல்கிறது.
படத்தின் காட்சி அமைப்பு, பின்னணி இசை கமலுக்கு இணையாக சிம்புவின் நடிப்பு, இருவரின் ஆக்ரோஷமான ஆக் ஷன் மோதல் என டிரைலர் பார்க்க நன்றாக உள்ளது. அதோடு கமலின் மனைவியாக அபிராமியும், காதலியாக திரிஷாவும் வருவார்கள் என டிரைலரை பார்க்கையில் புரிகிறது.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தியிலும் டிரைலர் வெளியாகி உள்ளது. ஒரு மணிநேரத்தில் தமிழ் டிரைலருக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்தன. தெலுங்கு, ஹிந்திக்கு குறைவான பார்வைகளே கிடைத்தன.