உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள்

பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள்

எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய நாவலை தழுவி உருவான படம் 'சிறை'. ஆர்.சி.சக்தி இயக்கிய இந்த படத்தில் லட்சுமி, ராஜேஷ், பாண்டியன், இளவரசி, அனுராதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் தன் கணவனை உதறி தள்ளிவிட்டு பலாத்காரம் செய்தவனோடு வாழும் கதை.

இந்த கதையின் நாயகி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவளாக சித்தரிக்கப்பட்டதால் அந்த சமூகத்தினர் படத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தனர். தணிக்கை குழுவினரும் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கருதி 10க்கும் மேற்பட்ட காட்சிகளை வெட்டியது. பல வசனங்களை நீக்கி பின்னர் 'ஏ' சான்றிதழ் கொடுத்தது.

இவை எல்லாவற்றையும் தாண்டி வந்த படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை. 60க்கும் மேற்பட்ட முறை பிரிவியூ ஷோ நடத்தியும் படம் விற்கவில்லை. இதனால் படத்தை தயாரிப்பு நிறுவனமே வெளியிட்டது. ஆரம்பத்தில் ரசிகர்கள் படத்தை புறக்கணித்தனர். பின்னர் மீடியாக்களின் பாராட்டுகளுக்கு பிறகு படம் பிக்அப் ஆகி 100 நாட்கள் வரை ஓடியது. லட்சுமிக்கு இந்த படம் பெரிய மைல் கல்லாக அமைந்தது.

படம் பெரிய வெற்றி பெற்றதால் காலப்போக்கில் அதன் குறைகள் மறைக்கப்பட்டு விட்டது. தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவனை தண்டிக்காமல் அவனோடு வாழ்ந்ததை எப்படி பெண் புரட்சியாக கருத முடியும் என்ற விமர்சனம் அப்போதே எழுந்தது. அது தவிர பாதிக்கப்பட்ட பெண் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதை ஏன் வலிந்து திணிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது. இது தவிர அனுராதாவின் கவர்ச்சி நடனம் ஏன் இடம் பெற்றது. உருவக்கேலி நகைச்சுவைகள் ஏன் இடம் பெற்றது என்றும் விமர்சிக்கப்பட்டது.

'சிறையின் குறைகள்' என்ற பெயரில் பல கட்டுரைகளும் அந்த காலத்தில் வெளியாகின. இதுகுறித்து பிற்காலத்தில் பேட்டி அளித்த இயக்குனர் ஆர்.சி சக்தி 'உருவகேலி நகைச்சுவைக்காக இப்போது மன்னிப்பு கேட்கிறேன். அனுராதா நடனம் போன்றவை வணிக நோக்கத்திற்காக சேர்க்கப்பட்டவை' என்று தெரிவித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !