கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல்
தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா, தமிழில் 1997ம் ஆண்டில் பிரவீன் காந்தி இயக்கிய ரட்சகன் என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு பயணம், தோழா போன்ற படங்களில் நடித்தவர், தற்போது ரஜினியுடன் கூலி, தனுஷ் உடன் குபேரா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களிலும் தான் நடித்துள்ள வேடங்கள் குறித்து நாகார்ஜுனா கூறுகையில், கூலி, குபேரா என்ற இந்த இரண்டு படங்களிலுமே கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.
என்னை பொறுத்தவரை எனக்கு முக்கியத்துவம் இல்லாத எந்த ஒரு படத்திலும் நடிக்க மாட்டேன். அதோடு ரஜினியின் கூலி படத்தை எடுத்துக் கொண்டால், தியேட்டரில் விசில் பறக்க போகிறது. அப்படி ஒரு கதையில் இந்த படத்தை இயக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். குபேரா படத்தை எடுத்துக் கொண்டால், தனுசுக்கு அது ஒரு முக்கியமான படமாக இருக்கும். சேகர் கம்முலா இயக்கி உள்ள அந்த படத்தில் வழக்கத்தில் இருந்து மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். அந்த வேடத்தில் என்னுடைய ஹீரோயிசம் என்பது துளியும் இருக்காது என்கிறார் நாகார்ஜுனா.