நியூயார்க் திரைப்பட விழாவில் அங்கம்மாளுக்கு கவுரவம்
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் மூத்த மகன் மறைந்த கைலாசத்தின் மனைவி கீதா கைலாசம். இப்போது சினிமாவில் பிஸியான நடிகை ஆகிவிட்டார். குணசித்திர, காமெடி வேடங்களில் கலக்கி வருகிறார். அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் அம்மாவாக தொடங்கி, எமகாதகி, மெட்ராஸ் மேட்னி என சமீபத்தில் அவர் நடித்த பல கேரக்டர்கள் பேசப்படுவதால் இன்னும் பிஸியாகி வருகிறார்.
அந்தவகையில், அவர் கதை நாயகியாக நடித்த அங்கம்மாள் என்ற படம் நியூயார்க் திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வாகி உள்ளது. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கிய இந்த படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித்துணி என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
அங்கம்மாள் என்ற வயதான பெண் ஏன் ஜாக்கெட் அணிய மறுக்கிறாள். அதன் பின்னணி என்ன என்ற ரீதியில் இந்த கதை நகர்கிறது. ஏற்கனவே மும்பை , கேரளா திரைப்பட விழாவிலும் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது. சரண் சக்தி, பரணி, முல்லையரசி, தென்றல் உட்பட பலர் நடித்துள்ளனர்.