பிளாஷ்பேக் : 200 ரூபாய்க்கு டப்பிங் பேசிய சிவாஜி
நடிகர் திலகம் சிவாஜி 'பராசக்தி' படத்தில் நடிப்பதற்கு முன்பு தீவிரமாக வாய்ப்பு தேடி வந்தார். அந்த காலகட்டத்தில் நாடகங்களிலும் நடித்து வந்தார். 1951ம் ஆண்டு தெலுங்கு, தமிழில் ஒரே நேரத்தில் வெளிவந்த படம் 'நிரபராதி'. தெலுங்கில் இதன் பெயர் 'நிர்தோஷி'. இதை ஹெச்.எம்.ரெட்டி இயக்கினார், முக்காமலா கிருஷ்ணமுர்த்தி என்ற வழக்கறிஞர் நாயகனாக நடித்திருந்தார். அஞ்சலி தேவி இரண்டு வேடங்களில் நடித்தார். இவர்களுடன் ஜி.வரலட்சுமி, கொன்னா பிரபாகர் ராவ், கைகல சத்யநாராயணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தின் நாயகனான முக்காமலா கிருஷ்ணமூர்த்திக்கு தமிழ் தெரியாது. எனவே அவருக்கு டப்பிங் குரல் கொடுக்க முடிவு செய்தார் இயக்குனர் ரெட்டி. அப்போது அந்த படத்தில் நடித்த அஞ்சலி தேவி 'எனக்கு தெரிந்து கணேசன் என்ற பையன் இருக்கிறான். மேடை நாடகங்களில் நன்றாக தமிழ் பேசுகிறான். அவனை அழைத்து பேச வையுங்கள்' என்றார். ரெட்டியும் சிவாஜியை அழைத்து பேசி அவருக்கு 500 ரூபாய் சம்பளம் பேசி டப்பிங் பேச வைத்தார்.
அன்றைக்கிருந்த நிலையில் சிவாஜிக்கு அந்த பணம் பெரியது என்பதால் டப்பிங் பேசினார். ஆனால் படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெறாததால் சிவாஜிக்கு முன்பணமாக கொடுத்த 200 ரூபாயோடு சரி. மீதி பணத்தை கொடுக்கவில்லை.
ஆக, சிவாஜியின் குரல்தான் முதலில் சினிமாவில் அறிமுகமானது. சினிமாவில் டப்பிங் கலைஞராகத்தான் சிவாஜி தன் வாழ்க்கையை தொடங்கி உள்ளார். சினிமாவிற்காக அவர் வாங்கிய முதல் சம்பளம் 200 ரூபாய்.