மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ?
2025ம் ஆண்டு வெளிவந்த படங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற படம் 'டூரிஸ்ட் பேமிலி'. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம். அப்படத்தில் இலங்கையிலிருந்து அகதியாக தமிழகத்திற்கு வந்த குடும்பமாக சசிகுமார் குடும்பத்தின் கதாபாத்திரம் இருந்தது. இலங்கைத் தமிழ் பேசி அந்தப் படத்தில் நடித்திருந்தார் சசிகுமார். தியேட்டர்களில் 50 நாள் ஓட்டம், 90 கோடிக்கும் அதிகமான வசூல் என பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
சசிகுமார் நடித்து அடுத்து நாளை மறுநாள் வெளியாக உள்ள 'ப்ரீடம்' படத்திலும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில்தான் நடித்துள்ளார். 80களில் நடக்கும் கதை. அவரது கர்ப்பிணி மனைவி அகதியாக தமிழகம் வந்திருக்க சில மாதங்கள் கழித்து இங்கு வருகிறார் சசிகுமார். இப்படத்திலும் இலங்கைத் தமிழ் பேசித்தான் நடித்துள்ளார்.
அடுத்தடுத்த படங்களில் இலங்கைத் தமிழர் கதாபாத்திரம் என்பது யதேச்சையாக அமைந்ததுதான். 'ப்ரீடம்' படம் எப்போதோ வந்திருக்க வேண்டியது. தாமதமாக வெளிவருகிறது. அதனால்தான் அடுத்தடுத்து இப்படி அமைந்துள்ளது. இலங்கைத் தமிழர் சென்டிமென்ட் சசிக்கு மீண்டும் வெற்றியைத் தருமா என்பது இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியும்.