சென்ட்ரல் பட விழாவில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் நினைவுகள்
சென்ட்ரல் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார் காக்காமுட்டையில் சிறுவனாக நடித்த விக்னேஷ். இதில் வில்லத்தனமான ரோலில் நடித்து இருப்பவர் இயக்குனர் பேரரசு. இந்த பட விழாவில் தலைப்புக்கு ஏற்ப, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் குறித்து பலரும் பேசினார்கள்.
முதலில் பேசிய டிரம்ஸ் சிவமணி, ''எனக்கும் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கும் நிறைய தொடர்பு உண்டு. 1975 முதல் சினிமாவுக்கு வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். அப்போது என் வீடு பேசின் பிரிட்ஜ் அருகே இருந்தது. அதனால், கோடம்பாக்கத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் சென்று அங்கே இருந்து ரிக்ஷாவில் செல்வேன். அந்த காலத்தில் பாடகர் எஸ்பிபி ஆதரவு கொடுத்தார். சில முறை இசைக்கருவிகளை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் வைத்துவிட்டு, வீட்டுக்கு போய் டக்கென ரெடியாகிவிட்டு, கச்சேரிக்கு செல்வேன், எத்தனையோ நாடுகளுக்கு சென்றாலும் சென்ட்ரலை மறக்க முடியாது ''என்றார்.
இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் பேசுகையில் ''சினிமாவில் சேர வேண்டும், திரைப்பட கல்லுாரி போக வேண்டும் என்ற கனவுடன் 1980ல் சென்னைக்கு வந்தேன். நான் வந்து இறங்கிய முதல் இடம் சென்னை சென்ட்ரல்தான். அப்போது இந்த அளவுக்கு சுத்தமாக இருக்காது. ஆனாலும், அந்த சென்ட்ரலை மறக்க முடியாது'' என்றார். இந்த படம் ஜாதி பாகுபாடுகளை, அதனால் ஏற்படும் பாதிப்புகளை சொல்கிறதாம்.