மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
72 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
72 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
72 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
72 days ago
கொஞ்சும் தமிழ் பேசி, தமிழ் திரை ரசிகர்களின் நெஞ்சமெல்லாம் தஞ்சமென இன்றும் துயில் கொள்ளும் இந்த “கன்னடத்துப் பைங்கிளி”யின் கலையுலகப் பயணத்திற்கு வித்திட்டது, மக்கள் திலகத்தின் “நாடோடி மன்னன்” என்றால், நடிப்புலக பட்டறையில் அவரை நாடறியச் செய்தது நடிகர் திலகத்தின் “பாகப்பிரிவினை”. இந்த இருபெரும் திலகங்களின் இணையற்ற கலைப்பயணத்தில் ஈடற்ற பங்காற்றி, இன்றியமையா கலைப் படைப்புகளைத் தந்த “அபிநய சரஸ்வதி” பி சரோஜாதேவி, நடிகர் திலகத்தோடு இணைந்து நடித்த எத்தனையோ காவியப் படைப்புகளில் சிறப்பு மிக்க ஒன்றாக பார்க்கப்படுவதுதான் இந்த “இருவர் உள்ளம்”.
22 திரைப்படங்களில் சிவாஜியோடு இணைந்து நடித்திருந்த நடிகை சரோஜா தேவிக்கு, அவரது 50வது திரைப்படம் என்ற ஒரு சிறப்புக் குறியீட்டோடு வந்து, அவருக்கு பெருமை சேர்த்திருந்ததோடு, காலம் கடந்தும் பேசப்பட்டு வரும் ஒரு போற்றுதலுக்குரிய திரைப்படமாகவும் அமைந்ததுதான் இந்த “இருவர் உள்ளம்” திரைப்படம்.
'சாகித்ய அகாடமி விருது” பெற்ற எழுத்தாளர் லக்ஷ்மியின் “பெண் மனம்” என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில், 'சாந்தா' என்ற ஒரு கனமான நாயகி கதாபாத்திரத்தில், சிவாஜிகணேசனுக்கு இணையாக, தனது அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, பார்ப்போரின் உள்ளங்களைப் பரவசம் கொள்ளச் செய்த நடிகை சரோஜா தேவி, “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற திரைப்படத்திற்குப் பின் மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் வசனம் பேசி நடித்திருந்த திரைப்படமாகவும் அவருக்கு அமைந்திருந்ததுதான் இந்த “இருவர் உள்ளம்” திரைப்படம்.
இந்தப் படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடிகை சரோஜா தேவி உணர்ச்சி பொங்க, தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி நடிக்க வேண்டிய கட்டத்தில், சிவாஜிகணேசன், சரோஜா தேவியையும் மிஞ்சும் வண்ணம் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியதைக் கண்ட படத்தின் இயக்குநர் எல் வி பிரசாத், உடனே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, சிவாஜிகணேசனிடம் சென்று, இந்தக் குறிப்பிட்ட காட்சியில் நடிகை சரோஜாதேவியின் நடிப்பு மட்டுமே மேலோங்கி இருக்க வேண்டும். அவரது நடிப்பை மீறி உங்களது நடிப்பு இருந்துவிடக் கூடாது. அவ்வாறு நீங்கள் அவரை மீறி நடிக்கும் பட்சத்தில் இந்தக் காட்சி பாழாகிவிடும் என்று இயக்குநர் கூற, பின்னர் சிவாஜி தனது நடிப்பின் அளவைக் குறைத்து நடித்திருந்தார் அந்தக் காட்சியில். அந்த அளவிற்கு சிவாஜிக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய பல அரிய வாய்ப்புகளைப் பெற்று, அதை சரியாகப் பயன்படுத்தி, தமிழ் திரையுலகில் யாரும் ஈடு செய்ய முடியாத ஒரு இடத்தைப் பிடித்திருந்தவர்தான் நடிகை சரோஜா தேவி.
சிவாஜிகணேசன், சரோஜா தேவி என்ற இந்த இருபெரும் கலையுலக ஜாம்பவான்களின் திரைப்படங்களில், குறிப்பிடும்படியான முதல் பத்து படங்களைப் பட்டியலிடச் சொன்னால், இந்த “இருவர் உள்ளம்” திரைப்படத்தைத் தவிர்த்து யாராலும் பட்டியலிட முடியாது. அந்த அளவிற்கு ஒரு போற்றுதலுக்குரிய திரைப்படமான இத்திரைப்படம்தான் நடிகை சரோஜா தேவியின் 50வது திரைப்படம். இவரது 50வது திரைப்படமே, படத்தின் இயக்குநர் எல் வி பிரசாத் இயக்கியிருந்த இறுதி திரைப்படமாகவும் ஆனது.
படத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை மொத்தம் எட்டு! அத்தனையும் தேன் சொட்டு!! பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுத, இசையமைத்திருந்தார் 'திரையிசைத் திலகம்' கே வி மகாதேவன். மறைந்த நடிகை சரோஜா தேவியின் இயல்பான நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம், திரையரங்குகளில் 100 நாள்கள் வரை ஓடி, வணிக ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.
72 days ago
72 days ago
72 days ago
72 days ago