ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள்
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த நாட்களில் மீடியாக்களுக்கு சரியான தீனியாக சில நிகழ்வுகள் நடந்தன. முதலில் 'கூலி' படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் 2ம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் ஆகியோருடன் ஹிந்தி நடிகர் அமீர்கான் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வழக்கம் போல ரஜினிகாந்தின் மேடைப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை நடிகர் அஜித் திரையுலகில் நுழைந்து 33 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் இடம் பெற்ற சில வரிகள் சிலரை மறைமுகமாகக் குறிப்பிட்டதாகவே மீடியாக்களும், ரசிகர்களும் கருத்துக்களைப் பகிர்ந்தனர்.
நடிகர் சூர்யா குடும்பத்தினர் கடந்த 20 வருடங்களாக அவர்களது அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி உதவி செய்ததை நேற்று விழாவாகக் கொண்டாடினார்கள். அதில் நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்கள் பக்கம் போனாலும், யு டியூப் தளங்கள் பக்கம் போனாலும் ரஜினி, கமல், அஜித், சூர்யா என செய்திகள் நிறைந்து காணப்படுகிறது.