உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள்

முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள்


நடிகை ஸ்ரீதேவி உயிரோடு இருந்திருந்தால், இன்று தனது 62வது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடியிருப்பார். சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி கிராமத்தில 1963ம் ஆண்டு பிறந்தவர் ஸ்ரீதேவி. இவர் தந்தை ஐயப்பன் வக்கீல், தாய் ராஜேஸ்வரிதான் ஸ்ரீதேவி சினிமா துறையில் வளர காரணமாக இருந்தவர். திருப்பதியை சேர்ந்த அவரும் சினிமாவில் டான்சராக இருந்ததாக கூறப்படுகிறது. 1969ம் ஆண்டு ‛துணைவன்' படத்தில் முருகனாக நடித்தார் ஸ்ரீதேவி. பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக வந்தார். ‛ஆதிபராசக்தி' படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பார்வதியாக நடிக்க, ஸ்ரீதேவி அதிலும் முருகனாக நடித்தார். இப்படி ஆரம்பத்திலே கடவுளாக நடித்த பெருமை ஸ்ரீதேவிக்கு உண்டு.

அதை தொடர்ந்து கே.பாலசந்தரால் ‛மூன்று முடிச்சு' படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 13. அதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஒரு காலகட்டத்தில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் ஸ்ரீதேவி திகழ்ந்தார். போனிகபூரை 1996ல் திருமணம் செய்தபின் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார். ஜான்வி, குஷி பிறந்தபின் அவர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார்.

பின்னர் ‛மாலினி ஐயர்' என்ற சீரியல் மூலமாக நடிக்க தொடங்கினார். தமிழில் கடைசியாக அவர் நடித்த படம் சிம்புதேவன் இயக்க, விஜய் நடித்த ‛புலி'. சினிமா வாழ்க்கையில் ‛மாம்' என்ற படத்தில் கடைசியாக நடித்தார். 2018ல் துபாயில் காலமானார். மாம் பட சமயத்தில் சென்னை வந்த ஸ்ரீதேவி தனது அம்மா குறித்து தமிழகத்தில் விரிவாக பேசினார். இப்போது மாம் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஸ்ரீதேவி மகள் குஷியை நடிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

தமிழில் அறிமுகமானார் ஸ்ரீதேவி, அவர் மகள் ஜான்வி இப்போது இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவரை தமிழில் அறிமுகப்படுத்த பலர் முயற்சிக்கிறார்கள். அது இன்னும் நடக்கவில்லை. சென்னையில் இன்றும் ஸ்ரீதேவிக்கு பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துகள் வீடுகளாக, படப்பிடிப்புதளங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !