பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம்
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் இதுவரை ஆயிரக்கணக்கான படங்களின் படப்பிடிப்புகள் நடந்துள்ளது. 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களின் படப்பிடிப்பும் நடந்துள்ளது. 'ஜீன்ஸ்' படத்தில் ஷங்கர் உலக அதிசயங்கள் அனைத்தையும் 'ஹய்ர ஹய்ர ஹய்ரப்பா' பாடலில் காட்டி இருப்பார் அதில் அவர் தாஜ்மஹாலை அதுவரை யாரும் காட்டாத கோணங்களில் காட்டியிருப்பார்.
ஆனால் முதன் முதலாக தாஜ்மஹாலில் படமாக்கப்பட்டது 'பாவை விளக்கு' படத்தின் பாடல் காட்சிதான். 1960ம் ஆண்டு கே.சோமு இயக்கத்தில் உருவான 'பாவை விளக்கு' படத்தில் இடம்பெற்ற 'காவியமா நெஞ்சில் ஓவியமா' என்ற பாடல் காட்சி தாஜ்மஹாலில் படமாக்கப்பட்டது. சிவாஜியும், எம்.என்.ராஜமும் ஷாஜஹான், மும்தாஜாக தங்களை கற்பனை செய்து கொண்டு அந்த வேடமிட்டு ஆடினார்கள்.
அப்போதெல்லாம் தாஜ்மஹாலில் சினிமா படப்பிடிப்பு நடத்த எளிதாக அனுமதி கிடைக்காது. மிகவும் கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி, பார்வையாளர்கள் அதிகம் வராத நம்பர் குளிர் மாதத்தில் படப்பிடிப்பை நடத்தினார்கள்.
இப்போது படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்கப்படாத தாஜ்மஹாலின் கீழே உள்ள மும்தாஜ், ஷாஜஹானின் சமாதியிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இந்த பாடல் படத்தின் ஹைலைட்டாக அமைந்தது. மருதகாசியின் வரிகளுக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். சிதம்பரம் ஜெயராமன், பி.சுசீலா பாடி இருந்தனர்.