பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை
1985ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளிந்த படம் 'நாம் இருவர்'. இது சிவாஜியின் 250வது படம். தனது முதல் படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனமே தனது 250வது படத்தை தயாரிக்க வேண்டும். அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்த தனது மகன் பிரபு தன்னோடு நடிக்க வேண்டும் என்கிற ஆசையோடு சிவாஜி அதற்கான கதையை பலரிடம் கேட்டு அது சரியாக அமையாததால் அப்போது கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றிருந்த 'ராமபுரத ராவணனன்' என்ற படத்தின் உரிமத்தை வாங்கி அதையே தனது 250 படமாக நடித்தார்.
சிவாஜியின் வேண்டுகோளளை ஏற்று, ஏவிஎம் நிறுவனம் படத்தை தயாரித்ததோடு தங்களது புகழ்பெற்ற படமான 'நாம் இருவர்' படத்தின் தலைப்பையே சிவாஜியின் 250வது படத்திற்கும் வைத்தது.
ஊரில் சமூக விரோத செயல்களை செய்யும் வில்லன் கூட்டத்தை எதிர்த்து போராடும் ஒரு குடிகார ராணுவ சிப்பாயாக சிவாஜி நடித்தார். அவரை குடிபழக்கத்தில் இருந்து திருத்தி, அவருடன் சேர்ந்து வில்லன்களை சட்டத்தின் முன் நிறுத்தும் ஆசிரியராக பிரபு நடித்தார். சிவாஜியின் பேத்தியாகவும், பிரபுவின் காதலியாகவும் ஊர்வசி நடித்தார். சிவாஜியின் முன்னாள் காதலியாக சுஜாதா நடித்தார். படமும் பெரிய வெற்றி பெற்றது.