'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'அமரன்' படம் 300 கோடி வசூலைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் சிவகார்த்திகேயனின் நட்சத்திர அந்தஸ்தை நிறையவே உயர்த்தியது.
சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் 'மதராஸி'. செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஒரு வாரம் முன்பு வெளியான இப்படத்தின் டிரைலர் 16 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஒரு ஆக்ஷன் படமாக இப்படம் இருக்கும் என்பது டிரைலரில் வெளிப்பட்டுள்ளது. ஏஆர் முருகதாஸ் கடைசியாக இயக்கிய 'சிக்கந்தர்' ஹிந்திப் படம் தோல்வியைத் தழுவியது. அப்படத்தை 'அவுட்டேட்டட்' படம் என்று விமர்சித்தார்கள். அப்படியில்லாமல் 'மதராஸி' படத்தை இன்றைய டிரெண்ட்டில் எடுத்திருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
'அமரன்' படம் போல 'மதராஸி' படமும் 300 கோடி வசூலைக் கடந்தால் சிவகார்த்திகேயன் அடுத்த கட்டத்துக்கு மேலும் முன்னேறுவார்.