‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார்
சின்னத்திரை இயக்குனர் எஸ்என் சக்திவேல் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். இவர் இயக்கிய சின்ன பாப்பா பெரிய பாப்பா, பட்ஜெட் குடும்பம் போன்ற தொடர்கள் பிரபலமானவை. குறிப்பாக சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரில் தான் நடிகர் எம்எஸ் பாஸ்கர் பிரபலமானார். இதில் நளினி, ஸ்ரீப்ரியா, நிரோஷா உள்ளிட்ட பலர் நடித்தனர். குடும்பங்களை கவர்ந்த நகைச்சுவை தொடராக இது வெளியானது.
சினிமாவில் ‛இவனுக்கு தண்ணில கண்டம்' என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கினார். இதுதவிர ‛நாடோடிகள்' படத்தில் சசிகுமாரின் மாமாவாக வரும் நபராக குணச்சித்ர வேடத்தில் நடித்தார். இவரது மறைவுக்கு ராதிகா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எம்எஸ் பாஸ்கர் இரங்கல்
‛‛எஸ்என் சக்திவேல் என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய நலம் விரும்பி. பட்டாபி வேடம் மூலம் எனக்கு தமிழக மக்கள் இடையே பெயர் கிடைத்தது. அதற்கு அவர் தான் காரணம். அவரின் மறைவு செய்தி கேட்டு வேதனையாக இருந்தது. போராட்டம் தான் அவரின் வாழ்க்கை. இனி எந்த பிறப்பில் பார்க்கப் போகிறோம். அவரின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாறட்டும்'' என தெரிவித்துள்ளார்.