என்னுடன் நடிக்க மறுத்தவர்கள் இப்போது என் படத்தை புரமோட் செய்கிறார்கள் ; கென் கருணாஸ்
வெற்றிமாறன் இயக்கிய 'அசுரன்' படத்தில் தனுஷின் மகனாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கருணாஸின் மகனான கென். அதன் பிறகு நடிகர் தனுஷிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய கென், தற்போது 'யூத்' என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக மட்டுமல்ல இயக்குனராகவும் அறிமுகமாகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக 'சிறை' புகழ் அனிஷா அனில்குமார் நடித்துள்ளார். மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், விரைவில் இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இது குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார் கென்.
அப்போது அவர் கூறுகையில், “இந்த படத்தின் ஸ்கிரிப்டை பல நடிகைகளிடம் கூறினேன். பலர் பிடித்திருக்கிறது என்று சொன்னாலும் கூட நடிக்க மறுத்து விட்டார்கள். சிலர் இன்னொரு கதாபாத்திரத்தை கொடுங்கள் என்றனர். ஒரு சிலர் வாட்ஸ்அப் மெசேஜ் மூலமாக அனுப்பிய செய்திக்கு பதில் கூட சொல்லவில்லை. இந்த படத்தில் இடம்பெற்று தற்போது ரசிகர்களிடம் வைரல் ஆகி வரும் முட்டக்கலக்கி பாடலை என்னுடன் நடிக்க மறுத்த சில நடிகைகளே தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் ரீல்ஸ் வீடியோக்களாக வெளியிட்டு என் படத்திற்கு புரமோட் செய்து வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.