மலையாள திரையுலகில் நடிகர் மோகன்லால் கிட்டத்தட்ட 45 வருடங்களாக தொடர்ந்து முன்னணி நடிகராக இப்போதும் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார். அதேசமயம் பலமுறை தன்னை மலையாள நடிகர் சங்க தலைவர் பதவி தேடி வந்தபோது வேண்டாம் என்று மறுத்து வந்த மோகன்லால் தனது நண்பரும் முன்னாள் தலைவருமான காமெடி நடிகர் இன்னசென்ட்டின் மறைவுக்குப் பிறகு நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்பதற்கு சம்மதித்தார். ஆனாலும் சங்கத்தில் நிறைய பிரச்னைகளை அவர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
அதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல கடந்த வருடம் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை, அதனால் ஏற்பட்ட குழப்பம், நடிகர் சங்க நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது என எல்லாம் ஒரே நேரத்தில் தாக்க இதற்கு தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால். தற்போது புதிய தலைவராக அதுவும் முதல் முறையாக ஒரு பெண் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் சமீபத்தில் நடைபெற்ற தேர்தளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்ததற்கு அவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் தான் காரணம், அவர் அதில் சிக்க வைக்கப்பட்டார் என்பது போன்று இந்த தேர்தல் சமயத்தில் பல உறுப்பினர்கள் பேட்டி கொடுத்தார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் இது குறித்து மனம் திறந்துள்ள மோகன்லால், “நான் நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ததற்கு எந்த ஒரு நிர்ப்பந்தமும் காரணம் இல்லை. நான் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டேன். திடீரென நாங்கள் எல்லோரும் பலருக்கும் எதிரிகளை போல மாறிவிட்டோம். ஆனால் இந்த விமர்சனங்கள் காரணமாக நான் ராஜினாமா முடிவை எடுக்கவில்லை. இந்த சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இது தான் சரியான நேரம் என்று தான் ராஜினாமா செய்தேன். இதை நான் ஒரு தோல்வியாக பார்க்கவில்லை. ஒரு காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு தலைமை மாறுகின்ற ஒரு இயற்கையான நடைமுறையாக தான் பார்க்கிறேன். புதிதாக பெண் ஒருவர் தலைமை பொறுப்பு ஏற்று இருப்பது நடிகர் சங்கத்திற்குள் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கும் என நம்புகிறேன். அது மட்டுமல்ல நடிகர் சங்கத்துடன் முரண்பட்டு வெளியே சென்ற உறுப்பினர்கள் மீண்டும் நடிகர் சங்கத்திற்கு திரும்புவது குறித்து முடிவு செய்ய வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.