நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம்
சமீபத்தில் மலையாள திரையுலக நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்றது. கடந்த வருடம் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை காரணமாக நடிகர் சங்கத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், அதன் பிறகு தலைவராக இருந்த மோகன்லால் ராஜினாமா செய்தது என பல்வேறு பரபரப்புகளுக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் முதன்முறையாக ஒரு பெண் நடிகையான ஸ்வேதா மேனன் போட்டியிட்டு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாட்ஷா வில்லன் நடிகர் தேவன் தோல்வியை தழுவினார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஊர்வசியிடம் நீங்கள் ஏன் மலையாள நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடவில்லை என்கிற கேள்வி முன் வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ஊர்வசி, “இப்போது இருக்கும் சூழ்நிலையில் நடிகர் சங்க நிர்வாகம் தங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட எந்த நிலைப்பாடுகளுக்கும் எதிராக தனது குரலை உயர்த்த முடியும் என நான் நம்பவில்லை. அதனால் தான் இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை. அந்த நம்பிக்கை எனக்கு வரும்போது நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீர்மானிப்பேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகர் சங்கத்திலிருந்து விலகி சென்றவர்கள், குறிப்பாக சினிமா பெண்கள் நல அமைப்பைச் சேர்ந்த பல முன்னணி நடிகைகள் தற்போது ஒரு பெண் தலைமை ஏற்றும் கூட நடிகர் சங்கத்திற்கு மீண்டும் திரும்புவது பற்றி எதுவும் பேசவில்லையே என்று கேட்டதற்கு, “ஒருவேளை நான் தலைவராக இருந்திருந்தால் நிச்சயமாக அவர்கள் நடிகர் சங்கத்தில் இணைந்தே ஆக வேண்டும் என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பேன்” என்று கூறியுள்ளார் ஊர்வசி.