உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்த கர்நாடகா அரசு

டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்த கர்நாடகா அரசு

கர்நாடகா மாநிலத்தில் உள்ள தியேட்டர் கட்டணங்கள் கடந்த சில வருடங்களாக மிகவும் அதிகமாக இருந்தது. 800, 900, 1000 ரூபாய் வரை கட்டணங்களை தியேட்டர்காரர்களே நிர்ணயித்துக் கொண்டார்கள். புதிய படங்களுக்கு அவ்வளவு கட்டணம் கொடுத்து பார்க்க வேண்டி இருந்தது. புதிய படங்கள் வராத நாட்களில் சாதாரண கட்டணங்களும் அதிகபட்சமாக 400, 500 வரையும் இருந்தது.

அவற்றைக் கட்டுப்படுத்த கர்நாடகா அரசு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தது. நேற்று இது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து விதமான தியேட்டர்களிலும் டிக்கெட் கட்டணம் அதிகபட்சமாக ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.200 வரை மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள். 75 இருக்கைகளுக்கும் குறைவான பிரீமியம் வசதி கொண்ட தியேட்டர்களுக்கு மட்டும் இது பொருந்தாது.

2017ம் ஆண்டு இதுகுறித்து குறைக்க நடவடிக்கை எடுத்த போது அரசை எதிர்த்து தியேட்டர்காரர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றார்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு டிக்கெட் கட்டணங்கள் குறைக்கப்படுவதால் திரையுலகினரும், மக்களும் வரவேற்றுள்ளார்கள்.

இதன் காரணமாக 1000 கோடி என அடிக்கடி பெருமைப்பட்டுக் கொள்ளும் சிலருக்கு இனி அப்படியான வாய்ப்புகள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அது போல ஆந்திர, தெலங்கானா அரசுகளும் டிக்கெட் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என தெலுங்கு ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அங்கு புதிய படங்களுக்கு ஒரு வாரத்திற்கு டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி அரசு அனுமதி அளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !