உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அதிக சலுகைகள் பெறும் நடிகர்கள்: ஆமிர்கான் காட்டம்

அதிக சலுகைகள் பெறும் நடிகர்கள்: ஆமிர்கான் காட்டம்


தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலும் சில பல நடிகர்கள் மிக அதிகமான சம்பளத்தைத் தயாரிப்பாளர்களிடமிருந்து பெறுகிறார்கள். அது மட்டுமல்ல அவர்களுக்கான பல சலுகைகளையும் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு அவர்களது டிரைவர், தனி உதவியாளர் வரையிலான சம்பளத்தையும் தயாரிப்பாளர்களிடம் இருந்து பெறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

தாங்கள் வாங்கும் சம்பளத்தைத் தவிர இப்படி அதிகமான சலுகைகளை பெறும் சிலர் மீது நடிகர் ஆமிர்கான் குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் இது குறித்து பேசியுள்ளார்.

“தயாரிப்பாளர் படத்திற்கு தேவையானவற்றுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும். ஒப்பனைக் கலைஞர், முடி ஒப்பனையாளர், உடைகள் தயாரிப்பவர் ஆகியோருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும், அது படத்தின் ஒரு பகுதி. ஆனால் என் உதவியாளரோ, ஓட்டுநரோ, அவர்கள் எனக்காக வேலை செய்கிறார்கள், அதை ஏன் தயாரிப்பாளர் செலுத்த வேண்டும்?.

நான் மிகவும் சுயாதீனமானவன். என் பணியாளர்களுக்குத் தயாரிப்பாளர்கள் பணம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்பவில்லை. அது போக, அவர்கள் என் குழந்தையின் பள்ளி கட்டணத்தையும் செலுத்த வேண்டுமா ? இதற்கு எங்கே முடிவு?

தயாரிப்பாளர்கள் இப்போது ஒரு நடிகரின் ஓட்டுநரின் சம்பளம், தேநீர் அல்லது காபி கொண்டு வரும் உதவியாளர், தனிப்பட்ட சமையல்காரர்கள் ஆகியோருக்குக் கூட சம்பளம் தருகிறார்கள். சில நட்சத்திரங்கள் சமையல் வேன், உடற்பயிற்சி வேன் ஆகியவற்றை படப்பிடிப்புத் தளத்திற்குக் கொண்டு வருகிறார்கள், அதற்கும் தயாரிப்பாளரே பணம் தருகிறார். ஒரு நட்சத்திரம் கோடிகளில் சம்பாதிக்கும்போது, அவரால் தன் சொந்த பணியாளர்களுக்கு சம்பளம் தர முடியாதா? ஒவ்வொரு நட்சத்திரத்தின் முன்னுரிமையும் படத்திற்கு சுமையாக இல்லாமல் இருப்பதாக இருக்க வேண்டும். அதுதான் குழு உறுப்பினராக இருப்பது.

தயாரிப்புக்கு நேரடியாக தொடர்புடைய செலவுகளை மட்டுமே தயாரிப்பாளர்கள் ஏற்க வேண்டும். நான் மல்யுத்தம் பற்றிய ஒரு படம் செய்தபோது, பயிற்சிக்கான செலவை தயாரிப்பாளர் ஏற்றார்.

வெளியூர் படப்பிடிப்புகளுக்கு நான் செல்லும் போது எனது குடும்பத்தினர் உடன் வந்தால் அவர்களுக்கான மொத்த செலவுகளையும் நான்தான் செய்வேன்,” என்றும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !