மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு
ADDED : 155 days ago
புதுடில்லி: நடிகர் மோகன் லால் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் வெளியிட்ட உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில், மோகன்லாலுக்கு 2023ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. மோகன்லாலின் குறிப்பிடத்தக்க சினிமா பயணம் வருங்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும்.
இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக புகழ்பெற்ற நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கவுரவிக்கப்படுகிறார். இந்த விருது வரும் செப்டம்பர் 23ம் தேதி நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் தான் மோகன்லால். இவர் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்து வருகிறார்.
* இவர் பெரும்பாலும் மலையாள, கன்னட சினிமாத் துறையில் பணிபுரிகிறார். 400க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்துள்ளார்.
* இந்திய சினிமாவுக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக மத்திய அரசு, நாட்டின் மிக உயர்ந்த இரண்டு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. 2001ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2019ம் ஆண்டு பத்ம பூஷன் விருதுகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
மத்திய அமைச்சர் பாராட்டு
தாதாசாகேப் பால்கே விருது பெற உள்ள மோகன்லாலுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் அவரது படைப்புகளை பாராட்டியுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ள வாழ்த்து செய்தியில் மோகன்லாலின் பல்துறைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. பல ஆண்டுகளாக தனது சிறந்த படைப்புகளுடன், மலையாள சினிமா, நாடகத்துறையில் முன்னணியில் இருப்பவர்களில் ஒருவராக அவர் திகழ்கிறார், மேலும் கேரள கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் அவர் குறிப்பிடத்தக்க நடிப்பை வழங்கியுள்ளார். பல்வேறு ஊடகங்களில் அவரது சினிமா மற்றும் நாடகத் திறமை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது.
தாதாசாகேப் பால்கே விருது பெற்றதற்கு அவருக்கு வாழ்த்துக்கள். அவரது சாதனைகள் வரும் தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும். என கூறி உள்ளார்.