பிளாஷ்பேக்: மறக்க இயலாத எம் ஜி ஆரின் இரட்டை வேட வரலாற்றுத் தோல்விப்படம்
தமிழ் திரையுலகின் அடையாளமாகவும், தமிழ் சினிமா கண்ட பொற்கால நாயகனாகவும் பார்க்கப்படுபவர் புரட்சி நடிகர் எம் ஜி ஆர். வெள்ளித்திரையில் ஒரு முன்னணி நாயகனாக இவர் உயர்வு பெற்றபின், இவரது அனைத்து படங்களிலும் சமூகம் சார்ந்த பார்வை, பாட்டாளிகளின் உரிமை, ஏழை எளியோரின் நலன், வீரம், உண்மை, நேர்மை, போன்ற மனித வாழ்விற்கு அத்தியாவசியமான ஒழுக்க நெறிகளை தனது படங்களின் வசனங்கள் மற்றும் பாடல்கள் வாயிலாக இடம்பெறச் செய்து, பார்க்கும் பார்வையாளர்களுக்கும், தனது ரசிகர்களுக்கும் நற்பண்புகளை வலியுறுத்திச் சொன்ன ஒரு நாயகனாகவே கலையுலகில் பயணித்து, எண்ணிலடங்கா வெற்றிச் சித்திரங்களைத் தந்திருக்கின்றார். அவற்றில் இவரது இரட்டை வேட திரைப்படங்களுக்கு என ஒரு தனிச்சிறப்பு எப்போதும் உண்டு.
ஆரம்ப காலங்களில் ராஜா ராணி கதைகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி, நடித்து வந்த எம் ஜி ஆர், “நாடோடி மன்னன்” என்ற திரைப்படத்தின் மூலம் தனது இரட்டை வேட கலைப்பயணத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து “எங்க வீட்டுப் பிள்ளை”, “குடியிருந்த கோயில்”, “அடிமைப் பெண்”, “மாட்டுக்கார வேலன்”, “உலகம் சுற்றும் வாலிபன்” என இவரது பல இரட்டை வேட திரைப்படங்களில் தனக்கும், தனது ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் உள்ள தொடர்பினை பலப்படுத்தும் வண்ணம், படத்தில் இடம்பெறும் பாடல்களாலும், வசனங்களாலும் தனது கதாபாத்திரத்தின் மூலம் எடுத்துரைத்ததோடு, அப்படங்களையும் வெற்றித் திரைக்காவியங்களாக மாற்றும் வித்தை அறிந்தவராக வலம் வந்தார் எம் ஜி ஆர்.
இத்தனை எச்சரிக்கை உணர்வோடு, ரசிகர்களின் குறிப்பறிந்து தனது படைப்புகளை உருவாக்கி, வழங்கி வந்த எம் ஜி ஆரின் ஒரு ஆரம்பகால இரட்டை வேட திரைப்படம் எதிர்பாராத விதமாக அவரது ரசிகர்களையும், பார்வையாளர்களையும் ஈர்க்கத் தவறி, பெரும் தோல்வியை சந்தித்திருக்கின்றது என்றால், அது 1960ம் ஆண்டு வெளிவந்த “ராஜா தேசிங்கு” திரைப்படம் என்பது சினிமா தொடர்புடைய ஒவ்வொருவரும் அறிந்ததே.
“மதுரை வீரன்” என்ற ஒரு மாபெரும் வெற்றித் திரைக்காவியத்தைத் தந்த லேனா செட்டியாரின் “கிருஷ்ணா பிக்சர்ஸ்” தயாரிப்பில், அதே தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு உருவாக்கிய திரைப்படம்தான் இந்த “ராஜா தேசிங்கு”. 18ம் நூற்றாண்டில் செஞ்சியை ஆண்ட ஒரு குறுநில மன்னான ராஜா தேசிங்கின் கதையை அடிப்பைடையாகக் கொண்டு, திரைப்படமாக எடுத்து வெளியிட்டிருந்தனர் படக்குழுவினர். படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதியவர், “மதுரை வீரன்” திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் அமைத்துத்தந்த கவிஞர் கண்ணதாசன் என்பது மேலும் இத்திரைப்படத்திற்கு சிறப்பு. பல்வேறு பிரச்னைகள் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்துவந்த இத்திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் டி ஆர் ரகுநாத்.
படத்தில் எம் ஜி ஆரின் ஜோடியாக நடிகை பி பானுமதியும், நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரனின் ஜோடியாக நடிகை பத்மினியும் நடித்திருந்தனர். படத்தில் நடிகை பத்மினியின் கதாபாத்திரம் ஒரு இந்து இளவரசியாக வடிவமைக்கப்பட்டு, அவரை வைத்து ஒரு பரதநாட்டிய காட்சியையும் படமாக்கியிருந்த நிலையில், திடீரென அந்தக் கதாபாத்திரத்தை ஒரு முஸ்லீம் கதாபாத்திரமாக மாற்றம் செய்யப்பட்டதன் காரணமாக, அந்த பரதநாட்டியக் காட்சி படத்திற்கு தேவையற்றது என எம் ஜி ஆர் கருதியதால், அக்காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டு, படத்தை வெளியிட்டனர் படக்குழுவினர்.
படம் வெளிவந்த பின்பு, தயாரிப்புத் தரப்பினர் எதிர்பார்த்த வரவேற்பு படத்திற்கு கிடைக்கவில்லை. எம் ஜி ஆர் தேசிங்கு, தாவூத்கான் என்ற இரட்டை வேடங்களில் தனது சிறப்பான நடிப்பு மற்றும் வாள்வீச்சை வழங்கியிருந்தும் படம் தோல்வியடைந்ததற்கு காரணம், எம் ஜி ஆர் என்ற அந்த ஆளுமைமிகு நாயகனை, அவரது ரசிகர்கள் படத்தின் இறுதிக் காட்சியில் இறப்பதாக காட்டப்பட்டிருந்ததை ஏற்க மனமில்லாது போனதுதான் என்ற உண்மை வெட்ட வெளிச்சமாக தெரியவந்தது. 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 2 அன்று வெளிவந்த இத்திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களைக் கூட பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்பட்டு, வசூல் ரீதியாக ஒரு தோல்விப் படமாக மாறிப் போனது இந்த வரலாற்று சிறப்புமிக்க “ராஜா தேசிங்கு” திரைப்படம்.