உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : சரோஜாதேவியை வயிற்றில் மிதித்த சிவாஜி

பிளாஷ்பேக் : சரோஜாதேவியை வயிற்றில் மிதித்த சிவாஜி

1963ம் ஆண்டு வெளிவந்த படம் 'குலமகள் ராதை'. ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. சரோஜாதேவி, தேவிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எழுத்தாளர் அகிலன் எழுதிய 'வாழ்வு எங்கே?' என்ற தொடர் கதையை தழுவி இந்த படம் உருவானது.

ராதையும் (சரோஜாதேவி), சந்திரனும் (சிவாஜி) காதலிக்கின்றனர். அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கின்றனர். வீட்டைவிட்டு ஓடிப்போக முயற்சிக்கும்போது, ராதையின் மைத்துனி வனஜா ராதையைத் தடுத்து, ஓடிப்போக வேண்டாம் என்று அவளை சமாதானப்படுத்துகிறாள். இதனால் சந்திரன் தான் ஏமாற்றப்பட்டதாக எண்ணி காதலியையும், வீட்டையும் விட்டு வெளியேறி சர்கஸ் ஒன்றில் சேர்கிறான்.

அங்கு சந்திரன் சர்கஸ் கலைஞரான லீலாவைக் (தேவிகா) காதலிக்கிறான். ஒரு நாள் சிவாஜி பணியாற்றும் சர்க்கஸை பார்க்க எதேச்சையாக சரோஜாதேவி வருகிறார். அந்தரத்தில் விளையாடும் சிவாஜி, சரோஜாதேவியை கண்டதும் தன்னிலை மறந்து கீழே விழுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

இப்படத்தின் கிளைமாக்சில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிவாஜியை சந்திப்பார் சரோஜாதேவி. தன்னை காதலித்து ஏமாற்றிய கோபத்தில் சிவாஜி, சரோஜாதேவியின் தோள்பட்டையில் எட்டி உதைப்பது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றது. படப்பிடிப்பின்போது எதிர்பாராதவிதமாக அவர் கால் வழுக்கி, தோள்பட்டைக்குப் பதிலாக சரோஜாதேவியின் வயிற்றுப் பகுதியில் உதைத்துவிட்டார். இதனால் சரோஜதேவி தரையில் சுருண்டு விழுந்தார்.

இதனால் பயந்து போன சிவாஜி உடனே டாக்டரை அழைத்து வருமாறு கூறினார். ஆனால் சிறிது நேரத்திலேயே சரோஜாதேவி சிரித்துக்கொண்டே எழுந்து நின்று சிவாஜியிடம், எனக்கு மருத்துவர் தேவையில்லை மருத்துவர் எனக்குச் செய்ய வேண்டிய வேலையை இப்போது உங்கள் காலே செய்துவிட்டது என்று கூறினார்.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் சிவாஜியும், இயக்குநர் நாகராஜனும் குழப்பத்துடன் அவரைப் பார்த்தனர். அப்போது அவர், கடந்த சில நாட்களாகத் தீவிரமான வயிற்று உப்புசம் மற்றும் வாயுத் தொல்லை வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், பல மருந்துகளை உட்கொண்டும் அந்த வலி குறையவில்லை என்றும் சிவாஜி தனது வயிற்றில் உதைத்த அந்த உதை, தனது வாயுத் தொல்லையைச் சிறப்பாகக் குணப்படுத்திவிட்டதாக அவர் கூறினார். இதைக் கேட்டதும் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த சிவாஜி கணேசன், ஏ.பி.நாகராஜன் மற்றும் தேவிகா ஆகியோர் விழுந்து விழுந்து சிரித்தனர்.

அந்தக் காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது. இம்முறை சிவாஜி கணேசன் சரியாக அவரது தோள்பட்டையில் உதைத்து, அவரை கீழே விழச் செய்யும் வகையில் காட்சி படமாக்கப்பட்டது.

பின்னர், அந்தத் தற்செயலான உதை எப்படி இருந்தது என்று சிவாஜி கணேசன் சரோஜாதேவியிடம் கேட்டார். அதற்கு அவர் நகைச்சுவையாக, பாரதியின் வயிற்றில் யானை மிதித்ததாக சொல்வார்களே, அதுபோலத்தான் அந்த உணர்வு இருந்தது என்று கூறினார்.

யானை கடவுளின் பெயர் கணேசன். சரோஜாதேவியின் இன்னொரு பெயர் பாரதி. அதனால் சரோஜாதேவி அவ்வாறு குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !