உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கரூர் சம்பவத்தை நான் விமர்சிக்கவில்லை ; 'டிராகன்' நாயகி விளக்கம்

கரூர் சம்பவத்தை நான் விமர்சிக்கவில்லை ; 'டிராகன்' நாயகி விளக்கம்


நடிகர் விஜய் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அரசியல் கட்சி துவங்குவதாக அறிவித்து, இரண்டு மாநாடுகளை நடத்தி முடித்துவிட்டு தற்போது சனிக்கிழமை தோறும் தலா இரண்டு மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (செப்.,27) நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துவிட்டு கரூர் சென்ற விஜய், பிரசாரத்தை முடிக்கும் தருவாயில் அங்கே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த விஷயம் தமிழகம் மட்டுமல்ல இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொருவரும் இந்த உயிரிழப்பு சம்பவம் குறித்து ஒவ்வொரு விதமாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் 'டிராகன்' படத்தில் கதாநாயகியாக நடித்த கயாடு லோஹர் விஜய்யின் இந்த பிரசாரக் கூட்டத்தில் பல உயிர்கள் இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று வெளியானது. அந்த பதிவில், “உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அந்த கரூர் பிரசாரக் கூட்டத்தில் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரையும் நான் இழந்துவிட்டேன். இது தமிழக வெற்றிக் கழகத்தின் சுயநலமான அரசியல். விஜய்.. மக்கள் உங்களது புகழுக்காக விளையாட்டுப் பொருள்களா? இன்னும் எத்தனை பேர் உங்கள் பசிக்கு இறையாக இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பதிவை பார்த்து திரையுலகை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நடிகை கயாடு லோஹர், இப்படி வெளியான செய்தி பொய்யானது என்றும் அது தன்னுடைய அதிகாரப்பூர்வமான எக்ஸ் பக்கம் இல்லை என்றும் மறுப்பு தெரிவித்து தனது நிஜமான எக்ஸ் பக்கத்தில் இருந்து விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, கரூரில் எனக்கு யாரும் அப்படி நெருங்கிய நண்பர்கள் இல்லை என்றும் இது போன்ற தவறான செய்திகளை தயவு செய்து பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !