உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஓஜி' தயாரிப்பாளர் மீது அவமதிப்பு வழக்கு தொடர போகிறேன் ; வழக்கறிஞர் ஆவேசம்

'ஓஜி' தயாரிப்பாளர் மீது அவமதிப்பு வழக்கு தொடர போகிறேன் ; வழக்கறிஞர் ஆவேசம்


சமீபத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'ஓஜி' திரைப்படம் வெளியானது. படம் மூன்று நாட்களில் 200 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் வெளியாவதற்கு முன்பாக இந்த படத்திற்கான டிக்கெட் விலையை உயர்த்தி கொள்ளலாம் என தெலுங்கானா அரசு அறிவித்து இருந்தது.

ஆனால் ஹைதராபாத்தை சேர்ந்த வழக்கறிஞர் பர்லா மல்லேஸ் யாதவ் என்பவர் அரசின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து நீதிமன்றம் ஓஜி படத்திற்கான கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் ஓஜி பட தயாரிப்பாளர் தன்னை அவமதிக்கும் விதமாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாக கூறி அவர் மீது அவதூறு வழக்கு தொடர இருக்கிறேன் என்று செய்தியாளர்களிடம் ஆவேசமாக கூறியுள்ளார் வழக்கறிஞர் மல்லேஸ் யாதவ்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ஓஜி டிக்கெட் கட்டண உயர்வு குறித்த எதிர்ப்பு மனு தாக்கல் செய்தபின் அரசு உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் பட தயாரிப்பு நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் என்னைப் பற்றி குறிப்பிட்டு, தெலுங்கானா உயர்நீதிமன்றம் ஓஜி டிக்கெட் விலை உயர்வை நிறுத்தி வைத்துள்ளது. இதுவந்து மனுதாரரான மல்லேஸ் யாதவுக்கும் பொருந்தும். அதனால் அவருக்கு நிஜாமில் உள்ள எந்த திரையரங்கிலும் படம் பார்க்கும் விதமாக நாங்கள் 100 ரூபாய் கட்டண சலுகை அளிக்கிறோம். ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவதைப் போல நீங்களும் என்ஜாய் பண்ணி பாருங்கள் என்று கிண்டலாக குறிப்பிட்டு இருந்தார்கள். இது நீதிமன்ற உத்தரவையும் அவமதிப்பது போல இருக்கிறது. அதனால் அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !